கார்ப்பந்தயத்தில் போட்டியிடும் கனவை நோக்கி பயணம்

2 mins read
c714928f-be33-46b6-b80a-c32fa936e8cc
கார்ப்பந்தயப் பாவனைப் பயிற்சியில் பங்கேற்று மகிழ்ந்த இளையர்களில் சிலர். - படம்: டிரைவ் ஃபார் குட்

எஃப்1 கார்ப்பந்தயம் முடிவடைந்தும் கார்ப்பந்தயம் மீதான மோகத்துக்கு முடிவென்பதே இல்லை.

கார்ப்பந்தயத்தில் போட்டியிடுவதை மாதிரிப்படுத்தும் பாவனைப் பயிற்சி அனுபவத்தைக் கூடுதல் ஆதரவு தேவைப்படும் இளையர்கள் கிட்டத்தட்ட 50 பேர் பெற்றனர். அதற்கு வழிவகுத்தது ‘டிரைவ் ஃபார் குட் 2025’.

முஸ்லிமின் அறக்கட்டளை நிதிச் சங்கம், ‌‌ஷைன் சிறுவர், இளையர் சேவைகள் ஆகியவற்றைச் சார்ந்த அந்த இளையர்களுக்குப் பள்ளி விடுமுறையில் புதிய அனுபவமாக இருந்தது.

ஐரோப்பா, ஆசிய-பசிபிக் பகுதிகளில் முக்கியத் தரவக மையச் சேவைகளை வழங்கும் குளோபல் ஸ்விச், சிங்கப்பூரின் முன்னணி கார்ப்பந்தய பாவனைப் பயிற்சி நிறுவனமான ‘லீஜன் ஆஃப் ரேசர்ஸ்’ உடன் இணைந்து இதை ஏற்பாடு செய்தது.

உடல், மனநலத்தை மையப்படுத்தும் சிங்கப்பூரின் முதல் விடுதியான ‘தி இனி‌ஷியல் சாமா’வில் டிசம்பர் 3ஆம் தேதி நிகழ்ச்சி நடைபெற்றது.

‘லீஜன் ஆஃப் ரேசர்ஸ்’சின் கார்ப்பந்தய பாவனைப் பயிற்சி இயந்திரங்கள்மூலம், இளையர்கள் ஒருவருடன் ஒருவர் போட்டித்தன்மையுடன், ஆனால் நட்புறவுடன் விளையாடி, விடாமுயற்சி, ஒழுக்கம் போன்றவற்றைக் கற்றுக்கொண்டனர்.

இளையர்கள் ‘நேரக் கட்டுப்பாடு’ சவாலிலும் பங்கேற்று, குறிப்பிட்ட தூரத்தை ஆகக் குறைந்த நேரத்தில் முடிக்க முயன்றனர்.

“மக்களே எங்கள் வலிமை. இளையர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வளர்ச்சியை ஆதரிப்பதே ‘டிரைவ் ஃபார் குட்’ முயற்சியின் நோக்கம்,” என்றார் குளோபல் ஸ்விச் சிங்கப்பூரின் நிர்வாக இயக்குநர் டெரன்ஸ் டியோ.

“டிரைவ் ஃபார் குட் என்பது வெறும் பந்தயமன்று. இளையர்களின் கவனம், நட்பு மற்றும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்ப்பதற்கான ஒரு வாய்ப்பு,” என்றார் ‘லீஜன் ஆஃப் ரேசர்ஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனரும் ‘தி இனி‌ஷியல் சாமா’வை நிர்வகிக்கும் ‘கவர் புரோஜெக்ட்ஸ்’சின் நிறுவனருமான லிம் கியோங் வீ.

‘லீஜன் ஆஃப் ரேசர்ஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனரும் ‘கவர் புரோஜெக்ட்ஸ்’ நிறுவனருமான லிம் கியோங் வீ, இளையருடன் உரையாடுகிறார்.
‘லீஜன் ஆஃப் ரேசர்ஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனரும் ‘கவர் புரோஜெக்ட்ஸ்’ நிறுவனருமான லிம் கியோங் வீ, இளையருடன் உரையாடுகிறார். - படம்: டிரைவ் ஃபார் குட் 2025
குளோபல் ஸ்விச் ஆசிய பசிபிக் வணிக விற்பனை இயக்குநர் ஈவ்லின் சின்.
குளோபல் ஸ்விச் ஆசிய பசிபிக் வணிக விற்பனை இயக்குநர் ஈவ்லின் சின். - படம்: டிரைவ் ஃபார் குட் 2025
குறிப்புச் சொற்கள்