செருப்புக்குள் சிறுகல் புகுந்துவிட்டால் அணிந்திருப்பவரை உறுத்துவதுபோல், பகைவருக்கு உறுத்தலாய் நிற்கும் அவனது திரண்ட கால்கள், அகன்ற மார்பு, குளிர்ந்த கண்கள், குச்சிப்புல் போன்ற தாடி, காதளவு தாழ்ந்த கூந்தல், கையில் வில் என்றிருக்கும் இவன் யாரென நினைக்கும்போதே நெஞ்சம் இரங்குகிறது.
பிறருக்காக வாரி வழங்கி தனது செல்வத்தை இழந்துகொண்டிருப்பவர்கள் பலர், பிறருக்கு உதவுவதற்காக உழைப்பவர்கள் அதிகம். தன் வீட்டு அடுப்பின் புகையை மறந்து மகிழ்ச்சியாக வாழ்வதைப் போல் இவனும் ஊரைவிட்டு வெளியில் எங்கும் செல்லாதவன். காட்டை அரணாக்கி அதற்குள் ஒளிந்து கொள்ளாதவன். மக்களோடு மக்களாக நெருங்கி வாழ்பவன். இன்று விடியற்காலையில் கவர்ந்து சென்றவர்களின் திசையைக் கையால் சுட்டிக்காட்டி, நிதானமாக வில்லால் அவர்களை வென்று ஆநிரைகளை மீட்டான்.
ஆனாலும் அவன் வீட்டுப் பானையில் பால் உறைந்ததற்கான வெண்மை நிறம் எங்குமில்லை, விடியற்காலையில் தயிரைக் கடையும் மத்தின் ஓசையும் கேட்கவில்லை. அவன் வீட்டில் தயிர் பானைகளில் பாலில்லை, தயிர் கடையும் ஒலியும் கேட்கவில்லை அதனால் தன்னிடமிருந்த பசுக்களை மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டான் என்று கூறுகிறது பாடல். தன்னுடைய பசுக்களைப் பிறருக்குக் கொடுத்துவிட்டு வெறுங்கையோடு நிற்பவனே உண்மையான செல்வந்தன். வீரம் என்பது வெல்லும் வில்லில் மட்டுமில்லை, அதனை வாரி வழங்கும் மனத்தில் இருக்கிறது.
- விறலீ
