வண்ண விளக்குகள், கண்கவர் அலங்காரங்கள், இனிய இசை, செயற்கைப் பனிப்பொழிவு எனச் சிங்கப்பூர் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உற்சாகமாகத் தொடங்கவுள்ளன.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நெருங்கும்போது சிங்கப்பூர் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காகப் புத்துணர்ச்சியுடன் தயாராகிறது.
கட்டடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன. அத்துடன், கடைத்தொகுதிகளில் கிறிஸ்துமஸ் மரங்கள் காட்சியளிக்கின்றன.
குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றுகூடி அப்பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர்.
கண்களைக் கவரும் சுற்றுலாத் தலங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ரசிக்க விரும்புவோர் முதலில் கரையோரப் பூந்தோட்டத்திற்குச் செல்லலாம்.
அங்கு நடைபெறும் கிறிஸ்துமஸ் வொண்டர்லேண்ட் (Christmas Wonderland) நிகழ்ச்சியில் பிரம்மாண்டமான ஒளியூட்டப்பட்ட அலங்காரங்கள், கேளிக்கை விளையாட்டுகள், கிறிஸ்துமஸ் சந்தைகள் செயற்கைப் பனிப்பொழிவு ஆகியவற்றை அனுபவிக்கலாம்.
அதேபோல், ஆர்ச்சர்ட் சாலையில் அமைக்கப்படும் கண்கவர் மின்விளக்கு அலங்காரங்களைக் கண்டு குடும்பத்தினருடன் மாலை நேர நடைப்பயணம் மேற்கொள்ளலாம்.
மேலும், ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளையும் தவறவிடக் கூடாது. குறிப்பாக, ரெயின் வோர்டெக்ஸ் நீர்வீழ்ச்சியில் நடைபெறும் ஒளி, இசைக் காட்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன.
தங்ளின் பேரங்காடியில் இடம்பெறும் செயற்கைப் பனிப்பொழிவும் சிறுவர்களுக்குப் பூரிப்பு தருகிறது.
விழாக்காலத்தை எவ்வாறு கொண்டாடலாம்?
சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வது மட்டுமன்றி, கிறிஸ்துமசை மேலும் சிறப்பாகக் கொண்டாடப் பல வழிகள் உள்ளன. குடும்பத்தினருடன் இணைந்து கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கலாம். வண்ணமயமான விளக்குகள், நட்சத்திரங்கள், மணிகள் ஆகியவற்றைக் கொண்டு வீட்டை அழகுபடுத்தலாம். நண்பர்களுடன் பரிசுப் பொருள்களைப் பரிமாறிக்கொண்டு மகிழலாம்.
உணவுப் பிரியர்கள் பல்வேறு உணவகங்களிலும் தங்குவிடுதிகளிலும் ஏற்பாடு செய்யப்படும் கிறிஸ்துமஸ் விருந்துகளில் கலந்துகொள்ளலாம். அத்துடன், வறுத்த வான்கோழி, பலவகையான இனிப்புகள் கேக்குகளைச் சுவைத்து மகிழலாம். மேலும், கிறிஸ்துமஸ் சந்தைகளுக்குச் சென்று கைவினைப் பொருள்களையும் நினைவுப் பரிசுகளையும் வாங்கலாம்.
அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்வோம்
கிறிஸ்துமஸ் என்பது ஆடம்பரமான கொண்டாட்டங்களுக்கு மட்டுமே உரியதன்று. அன்பு, இரக்கம், ஈகை ஆகியவற்றை வெளிப்படுத்தும் நன்னாளாகும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று அன்பளிப்புகள் வழங்கலாம். ஏழை எளியோருக்கு உணவும் தேவையான பொருள்களையும் வழங்கி அவர்களின் இதயங்களைக் குளிரவைக்கலாம்!
