நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை

படம்: செயற்கை நுண்ணறிவு

05 Oct 2026 - 6:00 am

2 mins read

பதினொரு வயதான சுவாதியின் திறமைகளை மிளிரவிடாமல், அவளுடைய தயக்கம் தடுத்தது.

கூட்டமான அறைக்குள் நுழையும்போதோ அல்லது அவளது நான்காம் வகுப்பு ஆசிரியர் அவளை அழைக்கும்போதோ பயம் அவளை ஆட்கொண்டது.

சுவாதி திறமையாக எழுதக் கூடியவள். கவிதைகளை அடிக்கடி வாசிக்கும் பழக்கம் கொண்ட அவள், நாளடைவில் அவற்றைப் புனையும் திறனை வளர்த்துக் கொண்டாள். 

கவிதை வாசிப்புப் போட்டி  ஒன்றில் பங்கேற்க சுவாதியின் தமிழ் ஆசிரியரான திருவாட்டி மாலினி அவளை ஊக்குவித்தார்.

“நான் கவிதை எழுதித் தருகிறேன். அதை வேறு யாரையாவது படிக்கச் சொல்லுங்கள்,” என ஆசிரியரிடம் தயக்கத்துடன் சுவாதி கூறினாள்.

“உன் கவிதையை நீதான் படிக்கவேண்டும். நீ நன்றாக எழுதக்கூடியவள். எதற்காக மற்றொருவர் அதனை வாசித்து  உனக்கான பாராட்டைப் பெறவேண்டும்?,” என ஆசிரியர் மாலினி சொன்னார்.

ஆசிரியர் வலியுறுத்தியதால், போட்டியில் கவிதை வாசிக்க சுவாதி தயாரானாள்.

வெவ்வேறு பள்ளிகளுக்கு இடையிலான வாசிப்புப் போட்டிக்கு இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில் அவளுக்குச் சற்று பதற்றம் ஏற்படத் தொடங்கியது.

கவிதையைச் சரியாக மனப்பாடம் செய்திருந்தபோதும் பதற்றம் அவளை விடவில்லை. வகுப்பறையின் வெற்றுச் சுவரைப் பார்த்துச் சுவாதி பயிற்சி செய்வதைக் கவனித்தார் ஆசிரியர் மாலினி.

“சுவாதி!, இளம், துணிச்சலான நெஞ்சங்களுக்காக மகாகவி பாரதியார் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?” என ஆசிரியர் புன்னகையுடன் கேட்டார்.

 “என்ன ஆசிரியை?” என்று சுவாதி கேட்டார்.

 நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை என்றார்  ஆசிரியர்.

அப்படியென்றால், கம்பீரத்துடன் நிமிர்ந்து நின்று துணிச்சலுடன் பிறர் முகத்தைப் பார்த்துப் பேசுவது என அவர் கூறினார்.

அந்த வரியைக் கேட்ட சுவாதிக்கு இதுநாள் வரை இல்லாத ஊக்கம் பிறந்தது. சிரிப்புடன் ஆசிரியருக்கு நன்றி கூறிவிட்டு வீடு திரும்பினாள்.

கண்ணாடி முன் மூன்று வாரங்கள் பயிற்சி செய்த சுவாதி, தம் மனத்தில் ‘நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை’ என்ற வரியை மந்திரத்தைப் போல தனக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள்.  

புது சுவாதியாக மேடை ஏறி, தாம் இயற்றிய கவிதையை முழங்கி முதல் பரிசு பெற்றார்.

“சுவாதியா இது?” என விழிபிதுங்கிய சிலரைச் சுவாதி பொருட்டாகக் கருதவில்லை. கவிதை எழுதுவது மட்டுமன்றி மேடையிலும் வாசிக்க முடியும் என நினைத்து மகிழ்ந்த அந்தச் சிறுமி, இனி அடுத்து சிற்றுரை ஆற்ற  இலக்கு வைத்துக்கொண்டாள்.

குறிப்புச் சொற்கள்