சிறாருக்குப் பாதுகாப்பைக் கற்பிக்கும் ‘ஓடு, ஒளிந்துகொள், சொல்’

சிறாருக்குப் பாதுகாப்பைக் கற்பிக்கும் ‘ஓடு, ஒளிந்துகொள், சொல்’

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Oct 2026 - 2:18 pm

1 mins read

பள்ளியில் சந்தேகத்துக்குரிய ஒருவர் விட்டுச் செல்லும் பையைக் கண்டு, ஆலி, ரே, ஹேமி ஆகிய மூன்று மாணவர்கள் பதற்றமின்றி விரைவாக அந்த இடத்தை விட்டு ஓடுகின்றனர்.

ஒரு பாதுகாப்பான இடத்தில் ஒளிந்துகொண்ட பிறகு, சந்தேகத்துக்குரிய நபரைப் பற்றி தங்கள் ஆசிரியரிடம் உடனே தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர் சிங்கப்பூர் காவல்துறையிடம் புகார் அளித்தது மட்டுமன்றி, மாணவர்களின் விவேகமான செயலைப் பாராட்டுகிறார்.

ஆபத்தான சூழலில் பாதுகாப்பான இடத்துக்கு ஓடுவது, ஒளிந்துகொள்வது, நம்பகமான பெரியவரிடம் தெரிவிப்பது எனும் முக்கியப் பாதுகாப்பு விதிகளை ‘ஓடு, ஒளிந்துகொள், சொல்’ என்னும் புதிய சிறுவர் நூல் குழந்தைகளுக்கு எளிய முறையில் கற்பிக்கிறது.

‘எஸ்ஜி பாதுகாப்பு’ இயக்கத்தின் பத்தாம் ஆண்டை முன்னிட்டு, சிங்கப்பூர் காவல்துறையும் உள்துறை அமைச்சும் இணைந்து இந்நூலைத் தயாரித்துள்ளன. இதனை வெளியுறவு, உள்துறைக்கான இரண்டாம் அமைச்சர் சிம் ஆன் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தினார்.

இந்தப் புத்தகம் அளவில் சற்றே பெரியது. அத்துடன், குழந்தைகளைக் கவரும் வண்ணமயமான சித்திரங்கள் இதில் நிறைந்துள்ளன.

உரிமம் பெற்ற அனைத்துப் பாலர் பள்ளிகளுக்கும் இந்நூலின் பிரதிகள் வழங்கப்படும்.

வரும் நவம்பர் மாதம் முதல் பொதுமக்கள் இதனைப் பொது நூலகங்களில் இரவல் பெறலாம்.

மேலும், நூலகங்களில் காவல்துறை அதிகாரிகள் மாணவர்களுக்காகக் கதை சொல்லும் நிகழ்ச்சிகளையும் நடத்தவுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்