லிட்டில் இந்தியா சென்று பொங்கல் திருநாள் கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்தும் பொங்கல் வர்த்தகத்தில் மும்முரமாக இருக்கும் வணிகர்கள், பொருள்கள் வாங்க விரைந்த மக்கள் எனப் பலதரப்பினரின் கருத்துகளையும் அறிந்து வந்தது தமிழ் முரசு.
"கடந்த ஒரு மாதமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், இந்தியாவில் இருந்தும் மலேசியாவில் இருந்தும் கரும்பு, மஞ்சள் கொத்து போன்றவற்றை இறக்குமதி செய்வது கடினமாக இருக்கிறது. பொருள்களைக் கொண்டு வருவதும் சவாலாக இருக்கிறது," என்று ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நாளைக்குள் இந்தியாவில் இருந்து பொருள்கள் சிங்கப்பூருக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், வானூர்திக் கட்டணம் பலமடங்கு கூடிவிட்டதால் இம்முறை பொருள்களின் விலையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காய்கறி வாங்குவதற்காக லிட்டில் இந்தியாவிற்கு வந்திருந்த திருமதி சாந்திக்குப் பொங்கல் பானைகளைப் பார்த்ததும் கொண்டாட்ட உற்சாகம் தொற்றிக்கொண்டது.
"சிங்கப்பூரில் வேளாண்மை செய்யப்படுவதில்லை. ஆனாலும், உழவும் உழவர்களும் இல்லை எனில், நம்மில் எவருக்கும் உணவு கிடைக்காது. உழவுத்தொழிலுக்கு மிக முக்கியமாக விளங்கும் காளை மாடுகளின், பால் தரும் பசுக்களின் முக்கியத்துவத்தை நகர்ப்புறங்களில் வாழ்பவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காகவே என் மகன்கள் இருவரையும் ஆண்டுதோறும் பொங்கல் திருநாள் சமயத்தில் லிட்டில் இந்தியாவிற்கு அழைத்துச் செல்வேன்," என்று திருமதி ஜெயா சொன்னார்.