சிங்கப்பூரில் தமிழ்மொழி சார்ந்த பல தொழில் துறைகள் உள்ளன.
அவற்றில் தமிழ் மொழிபெயர்ப்பு, உரைப்பெயர்ப்பு, தமிழ்க் கல்வி, தமிழ் ஊடகம் போன்றவற்றில் பொதுத் துறையிலும் தனியார் துறையிலும் வேலை வாய்ப்புகள் பல இருந்துவருகின்றன.
தமிழ்மொழி மீது பற்றும் ஆர்வமும் கொண்ட இரு மொழி ஆற்றல் கொண்டவரான எவரும் அந்தத் துறைகளில் பணியாற்றலாம்.
கல்வி அமைச்சும் தேசியக் கல்விக் கழகமும் நீண்ட நாள் ஒன்றிணைந்து எடுத்த கூட்டு முயற்சியின் பயனால் தமிழ்மொழி மீது ஆர்வமுள்ள இளையர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
எதிர்காலத்தில் தமிழாசிரியர்களாக ஆக விழையும் மாணவர்களுக்கு நற்செய்தியாக தமிழ்மொழியில் இளங்கலைப் பட்டப்படிப்பு சிங்கப்பூரில் அறிமுகம் கண்டுள்ளது.
முழு நேரமாக நான்கு ஆண்டுகளுக்கு நடைபெறவிருக்கும் இப்பட்டப்படிப்பு, பலதுறைத் தொழிற்கல்லூரி, தொடக்கக்கல்லூரி படிப்பை முடித்த, தமிழ்மொழி கற்பித்தலில் ஆர்வமுள்ள இளையர்கள் தங்கள் கல்வித் தகுதியையும் தமிழ் ஆசிரியருக்கான நிபுணத்துவப் பயிற்சியையும் பெற்றுத் தங்கள் தகுதி நிலையை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும்.
இப்பயிற்சித் திட்டத்தின் மூலம் மாணவர்கள் பெறவிருக்கும் அனுகூலங்கள் குறித்து மூத்த கல்வியாளர்கள், தலைமை முதன்மை ஆசிரியர், தேசியக் கல்வி விரிவுரையாளர்கள் விளக்கம் அளிக்கவிருக்கிறார்கள்.
தமிழ் ஆசிரியர்களாக ஆக விரும்பும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளாக உள்ள இளையர்களுக்கு இந்தப் புதிய இளங்கலைப் பட்டப்படிப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கூறினார் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் திரு சி. சாமிக்கண்ணு.
இதைப் போன்று தனியார் நிறுவனங்களும் தமிழ்மொழி சார்ந்த துறையில் மனிதவளத்தை வலுவாக்க பல முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.
சிங்கப்பூரில் நிறுவப்பட்டு, சிங்கப்பூர் இந்திய சமூகத்தின் குரலாகக் கடந்த 84 ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளிவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'தமிழ் முரசு' நாளிதழில் பணியாற்ற ஆர்வம் கொண்டவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் வழங்குகிறது சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம்.
வளமான வாழ்க்கைத் தொழிலைத் தமிழ் முரசு நிறுவனத்துடன் தொடரும் நோக்கத்தில் அதன் தாய் நிறுவனமான சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) சிறப்புமிக்க கல்வி உபகாரச் சம்பளத்தை அறிமுகப்படுத்துகிறது.
குறிப்பாக தமிழ் முரசில் பணியாற்றுவதில் ஆர்வம் கொண்ட இளம் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் உடனே இந்தக் கல்வி உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
செய்தியாளராக பணியாற்ற விரும்புவோரின் திறன்களை வளர்ப்பதற்கு எஸ்பிஎச் உபகாரச் சம்பளங்களை வழங்கி வருகிறது.
மாறிவரும் உலகச் சூழலில் ஒவ்வொரு துறையும் மாற்றங்களை எதிர்நோக்கி வருகிறது. தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியும் அன்றாட செயல்பாடுகளில் மின்னிலக்க நடைமுறைகள் அதிகம் இடம்பிடித்து வரும் நிலையிலும் ஊடகத் துறையும் பல மேம்பாடுகளையும் மாற்றங்களையும் கண்டுவந்துள்ளது.
அந்த வரிசையில் ஊடகப் பணியில் செய்தி சேகரிப்பதும் எழுதுவதும் மட்டுமின்றி காணொளிகள் போன்ற புதிய வடிவில் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் இன்றைய செய்தியாளர்கள் ஈடுபடுகிறார்கள். சமூக, நாட்டு, உலக நடப்புகளைக் கண்டறிந்து கற்றல் ஆர்வமிகுதியுடன் இருமொழி ஆற்றலும் கொண்டவர்கள் உடனே விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று தமிழ் முரசின் மின்னிலக்க, செய்தி ஆசிரியர் திரு தமிழவேல் கூறினார்.