இளமைக் காலம் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு காலம் என்று கூறுவர். அத்தகைய காலகட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது அவசியம். நோய் பாதிப்பின்றி ஆரோக்கியமாக வாழ, ஆரோக்கிய உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் உடற்கட்டைப் பேணுதல் முதலியவை இன்றியமையாதவை.
உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும், மது அருந்துவதை மிதமான அளவில் வைத்திருக்க வேண்டும், உடல் எடை ஆரோக்கியமற்ற நிலையை அடையக்கூடாது, உணவுவகைகள் ஆரோக்கியமானவையாக இருக்க வேண்டும், புகைப்பிடித்தல் கூடாது என்று பல ஆலோசனைகளை நாம் கேட்டிருப்போம்.
ஆனால், நிற்காமல் வேகமாக ஓடிக்கொண்டே இருக்கும் நம் வாழ்க்கைச் சூழலில் இவற்றைக் கடைப்பிடிப்பதற்கான நேரமும் வசதியும் சிலருக்கு இருக்காது.
அதிலும் கிருமித்தொற்று தொடர்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் உடற்பயிற்சிக் கூடங்களுக்குப் பலராலும் சென்று உடற்பயிற்சி செய்ய முடியவில்லை.
வீட்டிலிருந்தபடியே வீட்டிலுள்ள பொருட்களை வைத்து எப்படி உடற்பயிற்சி செய்வது, வீட்டிலேயே ஆரோக்கியமான உணவு வகைகளைக் குறுகிய நேரத்தில் தயாரிப்பது என்பதை தமிழ் முரசின் புதிய இணையக் காணொளி தொடரான 'உடலும் உள்ளமும்' காட்டவுள்ளது.
தொடரின் ஒவ்வொரு பாகத்திலும் டாக்டர் மா. பிரெமிக்கா, 'ஃபிட்மந்திராஸ்' (Fitmantras) மற்றும் 'கோபி வித் வான்ஸின்' நிறுவனரும் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாள ருமான சரவணன் கோவிந்தசாமி ஆகியோர் இடம்பெறுவர்.
மருத்துவக் குறிப்புகள், உடற்பயிற்சிக் குறிப்புகள், ஆரோக்கிய சமையல் குறிப்புகள் ஆகியவற்றைப் பார்வையாளர்களுடன் அவர்கள் பகிர்ந்துகொள்ளவுள்ளனர்.
சிங்கப்பூர் இளைஞர்களிடையே காணப்படும் உடல் பருமன் பிரச்சினை, 'மயோப்பியா' என்னும் கிட்டப்பார்வை நோய், மது, புகை பழக்கம், மனநலப் பிரச்சினைகள், உணவு உட்கொள்வது தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகள் (Eating Disorders) இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு இளையர்களுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் இருக்கலாம். ஆனால் இந்தச் சிக்கல்கள் ஏற்படுவதைத் தடுக்க வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வதில் சிரமத்தைச் சந்திக்கின்றனர்.
இந்நிலையில், சிரமத்தை எதிர்கொண்டு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை கடைப்பிடித்தால்தான் இளமைக் காலம் வாழ்க்கையின் சிறந்த காலமாக அமையும் என்பதை உணர்த்த வருகிறது 'உடலும் உள்ளமும்'.
உடலும் உள்ளமும்' முதலாம் பாகத்தில் உடல் பருமன் எதனால் ஏற்படுகிறது, அதன் விளைவுகள் யாவை, உடல் எடையைக் குறைக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றி பகிர்ந்துகொள்கிறார் டாக்டர் பிரெமிக்கா. 'பிஎம்ஐ' அதிகமாக இருந்தால் உடல் எடை பாதிக்கப்படுவது பற்றியும் அவர் விளக்குகிறார்.
சுவையான, ஆரோக்கியமான முறையில் 'ஸ்மூதி'' பானம் தயாரிப்பது எப்படி என்பதைச் செய்து காட்டுகிறார் திரு சரவணன். வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் துண்டைப் (Towel) பயன்படுத்தி செய்யக்கூடிய உடற்பயிற்சிகளையும் செய்து காட்டுகிறார் அவர். வரும் பாகங்களில் இதேபோல் முக்கியமான தகவல்களை சுவாரசியமான வகையில் கூற வருகிறது 'உடலும் உள்ளமும்'.