வேலைத் துறையில் புதுப் பாதை வகுக்கும் இளையர்கள்

2 mins read
b8869aac-9ed0-4e70-ab6c-ae79383435d2
-

கொவிட்-19 சூழலில் கல்வியும் பணியும் பல வகைகளில் பாதிக்கப்பட்டன. 15 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட இளையர்கள் கொவிட்-19 சூழலில் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டதாகப் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) ஆய்வுகள் கூறுகின்றன. ஏறக்குறைய 50 விழுக்காட்டினருக்குப் படித்துக்கொண்டிருக்கும் படிப்பை முடிப்பதில் தாமதங்கள் ஏற்பட்டதாகவும் இதில் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சிக்கல்களைச் சமாளிக்க, தாங்கள் ஆர்வம் கொண்டிருந்த துறைகளை இளையர்கள் நாடத் தொடங்கினர். பலரும் சொந்த வியாபாரங்களைத் தொடங்கினர். வேறுபட்ட துறைகளில் போட்டித்தன்மை குறைவு என்றும், இதனால் தங்களது வேலையைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்றும் தீர்மானித்த இளையர்கள் தங்களது முடிவுகளில் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

இணையத்தில் தொழில்களைத் தொடங்குவது மிக எளிதாகிவிட்ட சூழலில், குறைந்த முதலீட்டை கொண்டு இளையர்கள் பலர் இத்துறையில் காலடி வைத்துள்ளனர். குறிப்பாக, தென்கிழக்காசியாவில், இணைய வர்த்தகம் முன்பு இல்லாத அளவுக்குச் சூடிபிடித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் சுட்டியுள்ளது. எனவே, நஷ்டம் ஏற்படும் என முன்னர் அச்சப்பட்ட இளையர்களின் பார்வை இன்று மாறியுள்ளது.

தையல், சிற்பக் கலை முதலிய பொழுதுபோக்கு நடவடிக்கைகளைக் கொண்டு தொடங்கப்பட்ட இணையத் தொழில்கள் இன்று ஏராளம். நிதி அளவில் நிலைத்தன்மையுடன் இருப்பதற்கு ஒரு வேலை மட்டும் போதாது, குறைந்தபட்சம் இரண்டு வேலைகளில் தாங்கள் இருக்கவேண்டும் என்ற மனப்போக்கும் அதிகமாகத் தென்படுகிறது.

'கோடிங்' எனும் நிரலிடுதல் முதலிய தொழில்நுட்ப திறன்களைக் கற்றுக்கொள்வதிலும் இளையர்களின் ஆர்வம் பல மடங்கு அதிகரித்துள்ளது. வேலையும் கல்வியும் பெரும்பாலும் இணையத்துக்கே மாறிவிட்ட காரணத்தினால், இத்திறன்கள் கட்டாயம் வருங்காலத்தில் பயனளிக்கும் என்ற முற்போக்கான சிந்தனையுடன் இளையர்கள் பலர் செயற்பட்டனர்.