அச்சுறுத்தப்பட்டு வரும் சிங்கப்பூர் உயிரினங்கள்

2 mins read
8ec66fe8-d242-47b8-ab9a-a4c548fee03f
-

சிங்கப்பூரில் 1,500க்கும் மேற்பட்ட உயிரின வகைகள் உள்ளன. அவை அழியாமல் பாதுகாப்பது ஒரு கடினமான காரியமே. கட்டடங்கள் கட்டவும், சாலைகள் அமைக்கவும் சிங்கப்பூர் காட்டுப்பகுதிகளை அழிக்கிறது. இதனால் உயிரினங்களின் வாழ்வியல் பாதிக்கப்படுகிறது. 

மலாயன் புலிகள் ஒருகாலத்தில் சிங்கப்பூரில் இருந்தன. கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருந்த கடைசி மலாயன் புலிகளும் இறந்துபோயின. இவற்றை வேட்டையாடுவது அப்போது பிரபலமாக இருந்தது. மனிதர்களாலேயே பல புலிகள் கொல்லப்பட்டன. 

தற்போது, சிங்கப்பூரின் கடைசி காட்டுப்பூனையாக இருக்கிறது சிறுத்தை பூனை எனும் ‘லெப்பர்ட் கேட்’. இதன் வாழ்வியலைப் பலவும் அச்சுறுத்தி வருகின்றன. 50 சிறுத்தைப் பூனைகள் மட்டுமே சிங்கப்பூரில் எஞ்சி உள்ளன. 

காடுகள் அழிக்கப்படுவது, காட்டுப் பகுதிகளை நாம் பிரித்திருப்பது, சாலை விபத்துகள் ஆகியவை இப்பூனைகளைப் பெரிதும் பாதித்து வருகின்றன. ‘சுவேக்’ எனப்படும் சிங்கப்பூர் காட்டுப் பூனை நடவடிக்கைக் குழு இவற்றை பாதுகாக்க முயன்று வருகிறது. 

“நமது காடுகளில் சிலவற்றின் இடையே விரைவுச்சாலைகள் உள்ளன. இவை சிறுத்தைப் பூனை போன்ற வன விலங்குகளின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறது. சாலைக்கு ஓடி வரும் உயிரினங்கள், எளிதில் விபத்தில் சிக்கும் ஆபத்து அதிகரித்துள்ளது” என்று சுவேக் குழு தொண்டூழியர் திருவாட்டி சத்யா திவாரி கூறினார்.

சிங்கப்பூரில் சாலை விபத்துகளில் இறந்த மிருகங்களின் எண்ணிக்கை 2021இல் அதிகரித்தது. மொத்தம் 194 மிருகங்கள் வாகனங்களில் சிக்கி இறந்தன. 2016ஆம் ஆண்டில் இருந்ததைவிட இந்த எண்ணிக்கை இருமடங்காகும். 

-

“சிறுத்தைப் பூனைகள் சிறியவை. இவை இரவு நேர மிருகங்கள். எனவே, இவற்றை எளிதில் காண முடியாது. அவற்றை பாதுகாப்பதில் பல சிக்கல்கள் உள்ளன,” என்றார் திருவாட்டி சத்யா. கடைசியாகச் சிறுத்தைப் பூனையானது 2018இல் மண்டாய் பகுதியில் காணப்பட்டது. 

சுவேக் குழுவில் இணைந்துள்ளார் திருவாட்டி சத்யாவின் மகள் அலிஷா சந்திரா. இம்மிருகங்களைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் தேவைப்படுவதாக அலிஷா கூறுகிறார். “மிருகங்கள் அதிகமாகக் கடக்கும் சாலைப் பகுதிகளில் எச்சரிக்கைப் பலகைகள் தேவை. சாலை வேக வரம்புகள் இருக்கவேண்டும். அப்போதுதான் மிருகங்கள் தொடர்பிலான சாலை விபத்துகளைத் தவிர்க்கலாம்,” என்றார் இவர். 

மிருகங்கள் தொடர்பான சாலை விபத்துகளைக் குறைக்க அரசாங்கம் முயற்சிகள் எடுத்துள்ளது. பிகேஇ விரைவுச்சாலை சிங்கப்பூரின் இரு முக்கிய காடுகளைப் பிரித்தது. இரு காடுகளுக்கு இடையே மிருகங்கள் வந்து போவதற்காகப் பாலம் ஒன்றை அரசாங்கம் அமைத்தது. ‘ஈகோ-லிங்’ எனும் இந்த இயற்கை பாலம் 2012ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இதன்மூலம், காட்டு விலங்குகள் சாலையில் கால் வைக்காமல் பாலத்தைப் பயன்படுத்திப் பாதுகாப்பாக நடமாடின.