சிங்கப்பூரில் உள்ள திடல்களில் ஏராளமான எலி பொந்துகள் இருப்பதைக் கவனித்தார் ஆன் சி என்பவர். அங்கு வந்து உணவு அருந்துபவர்கள் விட்டுச்செல்லும் உணவு கழிவுகளும் குப்பைகளும் இச்சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்று அவருக்குத் தோன்றியது. மக்கள் தங்களது குப்பைகளைச் சரியான முறையில் அப்புறப்படுத்தினால் இதனைத் தடுக்கலாம் என்று அவர் எண்ணினார்.
மற்றொருவரான திருமதி சென், அன்றாடமும் தமது அக்கம்பக்கத்தில் குப்பை பொறுக்கிச் சுத்தப்படுத்துகிறார். தமது வட்டாரத்தில் குப்பை குவிவது அதிகரிப்பதை அவர் கவனித்தார். ஒரு மணி நேரத்திலேயே ஐந்து பெரிய பைகள்வரை குப்பையினால் நிரம்பி விடுகிறதாம்.
2023ஆம் ஆண்டில் தேசியச் சுற்றுப்புற அமைப்பு ஒரு நேரடி கலந்துரையாடலை நடத்தியது. “எனது கடமையல்லவே? சிங்கப்பூரின் பொது சுகாதாரத்துக்காக இணைந்து உழைப்பது.” எனும் தலைப்பில் இந்த உரையாடல் நடைபெற்றது.
அண்மையில் நடந்த ஆய்வில் பொதுமக்களில் 73% சிங்கப்பூரைச் சுத்தமாக வைத்திருப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என நம்பினர். 2019இல் இந்த விகிதம் 58% ஆக இருந்தது.
பொது இடங்கள் மற்றும் வசதிகளின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் சரிபார்ப்பதில் அரசாங்கத்துக்குப் பொறுப்பும் கடமையும் இருக்கவே செய்கிறது. அதேவேளையில், அரசாங்கத்தால் மட்டும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க முடியாது. பொதுமக்களுக்கும் ஒத்துழைக்கவேண்டும் அவசியம் என்று விளக்கப்பட்டது.
தியோங் பாரு சந்தையில் துப்புரவாளராகப் பணிபுரியும் 81 வயது திருவாட்டி சியாவ், ஒருமுறை மேசையைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது பயன்படுத்தப்பட்ட டயப்பர் ஒன்றினை ஒரு வாடிக்கையாளர் தட்டுகளின்மீது வீசியதை அவர் நினைவுகூர்ந்தார். டயப்பரைக் குப்பைத்தொட்டியில் போடுமாறு அவர் வாடிக்கையாளரிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு திருவாட்டி சியாவை அவ்வாடிக்கையாளர் கண்டித்து, இதுவும் துப்புரவாளர்களின் பணியே என்று கூறினார். இது திருவாட்டி சியாவுக்கு வருத்தம் தந்தது.
துப்புரவாளர்கள் வாடிக்கையாளர்களிடம் தட்டுக்களைத் திருப்பி வைக்க சொல்லி அன்பாகக் கேட்டுக்கொண்டாலும் சிலர் அதனை எதிர்த்துப் பேசுவதுண்டு. துப்புரவாளர்கள் அடக்கம் இல்லாமல் நடந்துகொள்கின்றனர் என்றும், அவர்கள் தங்களின் வேலையை அறைகுறையாகச் செய்கின்றனர் என்றும் சில வாடிக்கையாளர்கள் கூறுவர்.
துப்புரவாளர்களின் அனுபவங்களைக் கேட்டு, இச்சிக்கலைக் களைய அரசாங்கம் புது நடவடிக்கைகளைத் திட்டமிடப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பது மட்டும் போதாது. குப்பை போடுவோருக்குச் சைனாடவுன் போன்ற கூட்டமான இடங்களில் குப்பை பொறுக்கும் தண்டனை கட்டாயமாக்கப்படும். இதன்மூலம், பொது துப்பரவாளர்களின் கடுமையான உழைப்புக் குறித்து மக்கள் அறிவர் எனக் கலந்துரையாடலில் கூறப்பட்டது.

