அனைத்து அரசு ஊழியர்களும் 1.3 மாத ஆண்டிறுதி போனசைப் பெறுவார்கள் என்று பொதுச் சேவைத் துறை திங்கட்கிழமை (நவம்பர் 24) அன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
MX15 மற்றும் MX16 தரநிலைகளில் உள்ளவர்களுக்கும் செயல்பாட்டு ஆதரவுத் திட்டத்தில் உள்ளவர்களுக்கும் கூடுதலாக $600 ஒரு முறை தொகையாக வழங்கப்படும்.
பொதுத்துறை தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த அறிவிப்பு வந்ததாக பொது சேவைத் துறை மேலும் தெரிவித்தது.
“சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2025ஆம் ஆண்டில் சுமார் 4.0 விழுக்காடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதையும், 2025/2026ஆம் ஆண்டிற்கான தேசிய சம்பள மன்றத்தின் வழிகாட்டுதல்களையும் இந்த ஆண்டு இறுதி வழங்கீடு கருத்தில் கொள்கிறது,” என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 13வது மாத போனஸ் என்றும் அழைக்கப்படும் ஒரு மாத ஓய்வூதியம் அல்லாத வருடாந்தர ஊக்கத்தொகையையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆண்டு நடுப்பகுதியின் வழங்கீட்டு தொகையையும் சேர்த்து, அரசு ஊழியர்கள் முழு ஆண்டு வருடாந்தர மாறு விகித வழங்கீடாக மொத்தம் 1.7 மாத போனசைப் பெறுவார்கள். மேலும் இளநிலை அதிகாரிகளின் தரநிலைகளில் உள்ளவர்கள் 2025ஆம் ஆண்டில் $1,000 வரை கூடுதல் மொத்த வழங்கீட்டைப் பெறுவார்கள்.
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மனிதவள அமைச்சின் கண்ணோட்டத்தைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் தொழிலாளர் சந்தை நிலைமைகள் எதிர்பார்த்ததை விட வலுவாக இருப்பதாக பொதுச் சேவைத் துறை கூறியது.
மொத்த வேலைவாய்ப்பு முந்தைய காலாண்டை விட வேகமாக உயர்ந்தது. அதே நேரத்தில் வேலையின்மை விகிதங்களும் ஆட்குறைப்புகளும் குறைவாகவும் நிலையானதாகவும் இருந்தன என்றும் பொதுச் சேவைத் துறை விவரித்தது.
தொடர்புடைய செய்திகள்
“குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான தேசிய சம்பள மன்றத்தின் பரிந்துரைகளுக்கு இணங்க, அரசு ஊழியர்களுக்கான மாறு விகித வழங்கீட்டை நிர்ணயிப்பதில் அரசாங்கம் தொடர்ந்து முற்போக்கான அணுகுமுறையைப் பின்பற்றும்,” என்று பொதுச் சேவைத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

