தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரு வெள்ளி சந்தையில் மளிகைப் பொருள்களை அள்ளிய குடியிருப்பாளர்கள்

2 mins read
b3745dd9-e8af-42f3-b54e-c403cf1c573c
சி யுவான் சமூக மன்றத்தில் உள்ள ஹவ்காங் வில்லேஜ் வர்த்தகர்கள் நிலையங்களில் பழ வகைகள், காய்கறிகளை பெற்றுக்கொள்ளும் குடியிருப்பாளர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹவ்காங்கில் $1 சந்தை சனிக்கிழமை (மார்ச் 29) காலை 10 மணிக்குத்தான் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், அதற்கும் முன்னதாக, காலை 8 மணிக்கே சி யுவான் சமூக மன்றத்தில் கிட்டத்தட்ட 300 பேர் வரிசை பிடித்து நின்றிருந்தனர்.

இவர்கள் அனைவரும் $1 அட்டையை வாங்கி ஏறத்தாழ $12 பெறுமானமுள்ள முட்டைக்கோஸ், லெட்டுஸ், ஆரஞ்சுப் பழங்கள், எலுமிச்சம்பழங்கள் போன்றவற்றை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தவர்கள். 

இந்தப் பொருள்கள் அனைத்தும் ஹவ்காங் வில்லேஜ் வர்த்தகர்கள் சங்கம், அங் மோ கியோ குடிமக்கள் ஆலோசனைக் குழு, சி யுவான் சமூக மன்ற நிர்வாகக் குழு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த சந்தைக்கு வழங்கப்பட்ட பொருள்கள்.

சந்தைக்கு காலை 9.30 மணிவாக்கில் வருகை தந்த அங் மோ கிய குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேரில் டேவிட் வரிசை பிடித்திருந்த குடியிருப்பாளர்களைக் கண்டவுடன் சந்தை நடவடிக்கையை முன்னதாகவே தொடங்க முடிவு செய்தார். 

“கவலை வேண்டாம், அவசரப்பட வேண்டாம், நிதானமாகச் செயல்படுங்கள், வாங்க வேண்டியதை எல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள். இவை தவிர மற்ற பல நடவடிக்கைகளும் உங்களுக்காக காத்திருக்கின்றன,” என்று திரு டேரில் டேவிட் பைகளுடனும், பொருள்களை வைத்து இழுத்துச் செல்லும் வண்டிகளையும் கொண்டு வந்தோரைப் பார்த்துக் கூறினார்.  

இது பற்றிக் கூறிய கோ சாய் ஹோங் என்ற 70 வயது குடும்பதாரர், “எனக்கு எந்தவித இழப்பும் இல்லை. காத்திருந்தது வீண்போகவில்லை. நான் முன்னரே வந்ததற்குக் காரணம் இங்கிருப்போருடன் கலந்துறவாடுவதற்காக. வீட்டில் பொழுதுபோகவில்லை,” என்று கருத்துரைத்தார். 

ஓய்வுபெற்ற காப்புறுதி நிறுவன நிர்வாகியான 76 வயது திருவாட்டி லேக்சி மேரி செகுவேரா, தான் இந்த சந்தைக்கு வந்தது நல்லதாகப் போயிற்று என்றார். ஏனெனில், $1க்கு நிறைவாக வாங்க முடிந்ததாகக் கூறினார். எந்தச் சிறு உதவியும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க உதவுகிறது என்று அவர் சொன்னார்.   

குறிப்புச் சொற்கள்