சிங்கப்பூரின் ஓசிபிசி குழுமத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 4,000 ஆரம்பநிலை ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருமுறை வழங்கீட்டுத் தொகையாக $1,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவினத்தையும் பணவீக்கத்தையும் சமாளிக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆரம்பநிலை ஊழியர்கள் ஓசிபிசி குழுமத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.
2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கும் ஏப்ரல் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர்களுக்கு இந்த வழங்கீட்டுத் தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலையில் புதிதாகச் சேர்ந்தோரும் வங்கித்துறை, நிதிச் சேவை சங்கம் மற்றும் சிங்கப்பூர் வங்கி ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்தோரும் வழங்கீட்டுத் தொகை பெறுபவர்களில் அடங்குவர்.
“2025ஆம் ஆண்டில் பணவீக்கம் குறையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. ஆனால் வாழ்க்கைச் செலவினம் தொடர்பான அக்கறைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர் நலனுக்கு முன்னுரிமை வழங்குகிறோம். இந்த ஒருமுறை வழங்கீட்டுத் தொகை, உயர் வாழ்க்கைச் செலவினம் தொடர்பாக ஆரம்பநிலை ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் குறைக்கும் என்று நம்புகிறோம்,” என்று ஓசிபிசியின் மனிதவளப் பிரிவின் தலைவர் திருவாட்டி லீ ஹுவீ பூன் கூறினார்.

