தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பற்றாக்குறையைச் சமாளிக்க மத்திய சமையல்கூட முறைக்கு மாறும் 13 பள்ளிகள்

2 mins read
0cd4023b-cb32-4c47-bd2b-1b220e8c8d1a
யூசோஃப் இஷாக் உயர்நிலைப் பள்ளியில் செயல்படும் மத்திய சமையல்கூட முறை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பள்ளிக்கூட உணவகங்களில் நிலவும் உணவுக் கடை பற்றாக்குறையைச் சமாளிக்க சிங்கப்பூரில் உள்ள 13 பள்ளிகள் 2026 ஜனவரி முதல்  உணவு விநியோக நிறுவனங்களிடம் இருந்து, மாணவர்களுக்கான உணவைப் பெற உள்ளன.

மத்திய சமையல் கூட முறைக்கு அந்தப் பள்ளிகள் மாற இருக்கின்றன.

மத்திய சமையல் கூடம் என்பது சில பள்ளிக்கூடங்களை உள்ளடக்கிய ஒரு குழுவுக்கு ஒரே நிறுவனம் உணவு விநியோகத்தில் ஈடுபடுவதைக் குறிக்கும்.

பள்ளிக்கூட உணவகங்களில் கடைக்காரர்களை அமர்த்துவதில் சிரமங்கள் எழுந்துள்ள வேளையில் இந்தப் புதிய முறையை பள்ளிக்கூடங்கள் பின்பற்ற உள்ளன.

மேற்கு வட்டாரத்தில் உள்ள டாஸோங் தொடக்கப் பள்ளி, கிராஞ்சி தொடக்கப் பள்ளி, பயனீர் தொடக்கப் பள்ளி, குய்ஃபா தொடக்கப் பள்ளி, வெஸ்ட் வியூ தொடக்கப் பள்ளி ஆகிய ஐந்து பள்ளிகளுக்கும் சாங் செங் மீ வா என்னும் நிறுவனம் உணவு வகைகளை விநியோகிக்கும்.

அதேபோல, தெற்கு வட்டாரத்தில் சிஹெஜ்ஐஜெ (கெல்லோக்), ராடின் மாஸ் தொடக்கப் பள்ளி, ரிவர் வேலி தொடக்கப் பள்ளி ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து பள்ளிகளுக்கு குர்மெட்ஸ் என்னும் நிறுவனம் உணவு விநியோகிப்பில் ஈடுபடும்.

கடந்த 2021ஆம் ஆண்டு  பிளாங்கா ரைஸ் தொடக்கப் பள்ளிக்கு உணவு விநியோகம் செய்ய சேட்ஸ் (Sats) என்னும்  விமானப் பயண உணவு விநியோக நிறுவனம் பணியில் அமர்த்தப்பட்டது.

2026ஆம் ஆண்டு முதல் அந்தப் பள்ளிக்கூடத்திற்கும் குர்மெட்ஸ் நிறுவனம் உணவு விநியோகம் செய்யும்.

மேலும், ஊட்ரம் உயர்நிலைப் பள்ளியின் யோர்க் ஹில் வளாகம் 2027ஆம் ஆண்டு மூடப்படும் வரை அதற்கான உணவுத் தேவைகளை குர்மெட்ஸ் பூர்த்தி செய்யும்.

சிங்கப்பூரின் வடபகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் செயல்படும் நான்கு பள்ளிக்கூடங்களுக்கு வில்மர் டிஸ்ட்ரிபூஷன் என்னும் நிறுவனம் உணவு விநியோகத்தில் ஈடுபடும்.

கேசுரினா தொடக்கப் பள்ளி, சோங்ஸெங் தொடக்கப் பள்ளி, நார்த்ஓக்ஸ் தொடக்கப் பள்ளி, ஊட்ரம் உயர்நிலைப் பள்ளியின் செங்காங் வளாகம் ஆகியன அந்த நான்கு பள்ளிகள்.

மத்திய சமையல் கூடத்திற்குப் பொறுப்பேற்று இருக்கும் நிறுவனங்கள் தொடக்கப் பள்ளிகளில் $2.70க்குள் குறைந்தபட்சம் ஒரு முழு உணவையாவது வழங்க வேண்டும் என கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்தக் குறைந்தபட்ச விலை உயர்நிலைப் பள்ளிகளுக்கு $3.60ஆக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், சுகாதார மேம்பாட்டு வாரியம் வகுத்திருக்கும் பள்ளிக்கூட ஆரோக்கிய உணவுத் திட்டத்தின் வழிமுறைகளை அந்நிறுவனங்கள் பின்பற்றுவதோடு, தரமான உணவுத் தெரிவுகளை அவை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய சமையல் கூட உணவு முறை 2022ஆம் ஆண்டு யூசோப் இஷாக் உயர்நிலைப் பள்ளியில் ஒரு முன்னோடித் திட்டமாகக் கொண்டுவரப்பட்டது. தற்போது அது மேலும் சில பள்ளிகளுக்கு விரிவுசெய்யப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்