சிங்கப்பூர் சுங்கத்துறை நவம்பர் 30, டிசம்பர் 1ஆம் தேதிகளில் தீர்வை செலுத்தப்படாத மொத்தம் 17,219 அட்டைப்பெட்டி கள்ள சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்தது. இதில் நால்வர் கைதுசெய்யப்பட்டனர்.
தீர்வை மற்றும் பொருள், சேவை வரி ஏய்ப்பின் மொத்த மதிப்பு $1.87 மில்லியனுக்கும் அதிகம் என்று சுங்கத்துறை திங்கட்கிழமை (டிசம்பர் 8) வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது. 2025ல் இதுவரை கைப்பற்றப்பட்ட கள்ள சிகரெட்டுகளின் ஆகப்பெரிய வரி ஏய்ப்புத் தொகை இது.
நவம்பர் 30ஆம் தேதி பாண்டான் லூப்பிலும் டிசம்பர் 1ஆம் தேதி ஜூரோங் போர்ட் சாலையிலும் சுங்கத்துறை நடத்திய இரு அமலாக்க நடவடிக்கைகளின்போது கள்ள சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நவம்பர் 30 அமலாக்க நடவடிக்கையில், பாண்டான் லூப்பில் உள்ள தொழிற்சாலைக் கட்டடம் ஒன்றில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட வேன் ஒன்று சரக்குகளை ஏற்றி, இறக்கும் பகுதிக்குப் பின்னோக்கிச் செல்வதை அவர்கள் கவனித்தனர். அந்த வேனின் சரக்குப் பெட்டிக்குள் பழுப்பு நிறப் பெட்டிகளை மூன்று ஆடவர்கள் பின்னர் ஏற்றினர்.
அந்த வேனில் சோதனை செய்த அதிகாரிகள், அதில் தீர்வை செலுத்தப்படாத 2,400 அட்டைப்பெட்டி சிகரெட்டுகள் இருந்ததைக் கண்டறிந்தனர்.
கூடுதல் விசாரணைக்குப் பிறகு, அந்தத் தொழிற்சாலை கட்டடத்தில் உள்ள ஓர் அறைக்கு அந்த ஆடவர்களால் அழைத்துச் செல்லப்பட்ட அதிகாரிகள், அங்கு மேலும் 3,195 அட்டைப்பெட்டி கள்ள சிகரெட்டுகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
அந்த வேனையும் மொத்தம் 5,595 அட்டைப்பெட்டி கள்ள சிகரெட்டுகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்த வேன் ஓட்டுநரான 27 வயது சிங்கப்பூரரும் 30, 36, 39 வயதுடைய மூன்று இந்திய நாட்டவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த நாள் டிசம்பர் 1ஆம் தேதி ஜூரோங் போர்ட் சாலையில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், 11,684 அட்டைப்பெட்டி கள்ள சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான நான்கு ஆடவர்களுக்கு எதிராக நீதிமன்ற விசாரணை தொடர்வதாக சுங்கத்துறை தெரிவித்தது.

