கொன்கோர்ட் ஹோட்டல் சண்டை: கத்தியை ஒளித்துவைத்த ஆடவருக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு

2 mins read
59fd2ea4-e8f5-4bdb-afe9-8618809607ea
கொன்கோர்ட் ஹோட்டலுக்கு வெளியே நடந்த சண்டையில் பயன்படுத்தப்பட்ட கத்தியை ஒளித்துவைக்க உதவிய மதுபானக் கூட பாதுகாப்பு ஊழியர் (bouncer) ஒருவருக்கு 18 மாதங்கள் நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவு விதிக்கப்பட்டது.  - படம்: பிக்சாபே

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொன்கோர்ட் ஹோட்டலுக்கு வெளியே நடந்த சண்டையில் பயன்படுத்தப்பட்ட கத்தியை ஒளித்துவைக்க உதவிய மதுபானக் கூட பாதுகாப்பு ஊழியர் (bouncer) ஒருவருக்கு 18 மாதங்கள் நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவு விதிக்கப்பட்டது.

ஏ.ஆர். ரிட்வான் அப்துல் ரஹிம், 22, காவல்துறையினரிடம் பொய்யான வாக்குமூலத்தைக் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

போதிய பக்குவம் இல்லாததாலும் நண்பர்களின் மீது தவறுதலாகக் கொண்ட விசுவாசத்தாலும் வாழ்க்கையில் தவறான செயலில் இறங்கிய இளையர் ரிட்வான் என்று மாவட்ட நீதிபதி ஷென் வன்சின் கூறினார்.

கடந்த செப்டம்பர் மாதம் ரிட்வான் அரசாங்க ஊழியரிடம் பொய்யான தகவல் வழங்கியதாகத் தம்மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டையும் ஆதாரங்கள் காணாமல்போனதற்குக் காரணமாக இருந்ததற்கான மற்றொரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார்.

தண்டனை விதிக்கப்படும்போது மற்ற இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஆர்ச்சர்ட் ரோட்டில் கொன்கோர்ட் ஹோட்டல் கடைத்தொகுதியில் உள்ள ‘கிளப் ரூமர்ஸ்’ல் சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் அவர் பாதுகாப்பு ஊழியராகப் பணிபுரியத் தொடங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 20ஆம் தேதி காலை 6 மணிவாக்கில் மதுபானக் கூடத்தை மூடிக்கொண்டிருந்தபோது கும்பல் ஒன்று திரு முகம்மது இஸ்ராட் முகம்மது இஸ்மாயில், 29, முகம்மது ஷாருல்நிஸாம் ஒஸ்மான், 31, ஆகியோரைத் துரத்திக்கொண்டிருந்ததைக் கண்டார்.

திரு இஸ்ராட்டும் திரு ஷாருல்நிஸாமும் ‘கிளப் ரூமர்ஸ்’ல் முன்பு பாதுகாப்பு ஊழியர்களாகப் பணிபுரிந்ததை ரிட்வான் அறிந்திருந்தார்.

ஷாருல்நிஸாம் ரிட்வானிடம் ஒரு கத்தியைக் கொடுத்து அதனை எடுத்து ஓடும்படி மலாய் மொழியில் கூறினார்.

திரு இஸ்ராட்டைத் தாக்கிய 16 பேர் அடங்கிய குழு ரகசியக் கும்பல் ஒன்றின் உறுப்பினர்கள் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் பிரையன் டான் கூறினார்.

அந்தச் சண்டையைத் தொடர்ந்து, திரு இஸ்ராட் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரைக் கொலை செய்ததாக கும்பல் உறுப்பினர்களில் ஒருவரான அஸ்வேன் பச்சான் பிள்ளை சுகுமாறன், 29, மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்