$3 பி. கள்ளப்பண விவகாரம்: பறிமுதல் செய்யப்பட்ட பங்ளாக்கள் விற்பனையில்

$3 பி. கள்ளப்பண விவகாரம்: பறிமுதல் செய்யப்பட்ட பங்ளாக்கள் விற்பனையில்

சம்பந்தப்பட்டவை செந்தோசா கோவ் பங்ளாக்கள்
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைமஸ்

05 Oct 2026 - 3:35 pm

2 mins read

சிங்கப்பூரின் ஆகப்பெரிய கள்ளப்பண விவகாரத்துடன் தொடர்புடைய மூன்று செந்தோசா கோவ் பங்ளாக்கள் மீண்டும் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

அந்த பங்ளாக்களுக்குத் தனிப்பட்ட படகு நிறுத்தங்கள் இருக்கின்றன.

அவற்றோடு ஒன்றுசேர்க்கப்பட்ட, 99 ஆண்டுகள் குத்தகைக் காலத்தைக் கொண்டுள்ள இரு நிலப் பகுதிகளும் விற்பனைக்கு விடப்பட்டிருக்கின்றன. அவை 143, 145 கோவ் டிரைவ் நிலப் பகுதிகள் ஆகியவையாகும்.

சு ஹைஜின், லிம் பாவ்யிங், சாங் ருய்ஜின்

முன்னதாக இரு பங்ளாக்கள் அமைந்திருந்த அந்த நிலப் பகுதிகள், கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கிய குற்றம் நிரூபிக்கப்பட்ட சு ஹைஜின்னுக்குச் சொந்தமானவை என்று சிங்கப்பூர் நில ஆணையத்தின் ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

38, 40 ஓ‌ஷன் டிரைவில் இருக்கும் வேறிரு பங்ளாக்கள் லிம் பாவ்யிங்குக்குச் சொந்தமானவை. 13 பெர்ல் ஐலண்டில் இருக்கும் ஒரு பங்ளா அவரின் காதலர் சாங் ருய்ஜின்னுக்குச் சொந்தமானது.

சிங்கப்பூர் நில ஆணையத்தின் பதிவுகளின்படி அந்த வெளிநாட்டவர் மூவரும் சம்பந்தப்பட்ட சொத்துகளுக்கு உரிமை வகிக்கின்றனர். ஆனால், அந்த உரிமை இப்போது சட்டரீதியாகப் பறிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் உயர்தர நீர்முகப்புக் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இந்த சொத்துகள் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட மூன்று பில்லியன் வெள்ளி மதிப்பிலான ரொக்கத்திலும் சொத்துகளிலும் அடங்கும்.

சைப்ரஸ் நாட்டவரான சு ஹைஜின் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். அவரின் 174 மில்லியன் வெள்ளி மதிப்பிலான சொத்துகளில் 165 மில்லியனுக்கும் மேலானவற்றைப் பறிமுதல் செய்யுமாறு 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட சாங்குக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரின் 15.68 மில்லியன் வெள்ளி மதிப்பிலான சொத்து இஓஐ எனப்படும் தனிப்பட்ட முறையில் விருப்பம் தெரிவித்து வாங்க வகைசெய்யும் விற்பனை முறையில் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 15ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் விருப்பம் தெரிவிக்கவேண்டும்.

கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கியது உள்ளிட்ட குற்றங்களை ஒப்புக்கொண்ட லின்னுக்கும் 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

மூன்று பில்லியன் கள்ளப்பண விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் 10 பேரில் சாங், லின் இருவரும் அடங்குவர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கள்ளப்பணம்விற்பனைசந்தைபறிமுதல்சிறைத்தண்டனை