உற்பத்தித்திறனை உயர்த்த பாஸ்டன் கன்சல்டிங் நிறுவனத்துடன் 30 கட்டுமான நிறுவனங்கள் பயிற்சி பெறும்: சீ ஹொங் டாட்

உற்பத்தித்திறனை உயர்த்த பாஸ்டன் கன்சல்டிங் நிறுவனத்துடன் 30 கட்டுமான நிறுவனங்கள் பயிற்சி பெறும்: சீ ஹொங் டாட்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Oct 2026 - 4:26 pm

2 mins read

கட்டுமானத் துறையில் உற்பத்தித்திறனையும் திட்டங்களில் கூட்டு முயற்சியையும் அதிகரிக்கும் நோக்கில், அடுத்த இரு ஆண்டுகளில் ஏறக்குறைய 30 கட்டுமான நிறுவனங்கள் ‘பாஸ்டன் கன்சல்டிங் குரூப்’ என்ற உலகளாவிய நிர்வாக ஆலோசனை நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ள ‘லிஃப்ட்’ (LIFT) திட்டம், பங்கேற்கும் நிறுவனங்களுக்குத் தங்கள் வேலைகளை மறுவடிவமைப்பு செய்யவும் ஆற்றல்களை மேம்படுத்தவும் உதவும்.

அதன் மூலம், ஒப்பந்ததாரர்கள், துணை ஒப்பந்ததாரர்கள், மேம்பாட்டாளர்கள், வடிவமைப்பு ஆலோசனை நிறுவனங்கள், அத்துறையைச் சேர்ந்த மற்ற அமைப்புகளுக்குக் குழு ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் பணிகளைச் சீராக்கவும் நேரடியாகப் பயிற்சிகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.

தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) நடைபெற்ற சிங்கப்பூர் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் வருடாந்தர இரவு விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

கட்டடச் சூழல் துறைக்கான மூன்று முக்கிய முன்னுரிமைகளை அவர் கோடிகாட்டினார்.

உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், திட்டங்களை மேம்பட்ட முறையில் ஒருங்கிணைத்து நிறைவேற்றுதல், திறனாளர்களை ஈர்த்து தக்கவைத்துக்கொள்வதற்காக முதலீடு செய்தல் ஆகியவையே அவை.

கட்டுமானத் துறை மனிதவளப் பற்றாக்குறையை எதிர்நோக்கிவரும் நிலையிலும், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகள் (பிடிஓ), எம்ஆர்டி பாதைகள், சாங்கி விமான நிலைய முனையம் 5, ‘லாங் ஐலண்ட்’ திட்டம் போன்ற முக்கியத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அவசியத்தை அமைச்சர் சீ சுட்டிக்காட்டினார்.

“நாம் பாதுகாப்பு, தரத்தில் உயர்நிலையைக் கட்டிக்காத்து, கட்டடங்களை நிர்மாணிக்க மேம்பட்ட வழிகளைக் கண்டறிந்து, மனிதவளத்தை மேலும் உற்பத்தித்திறனுடன் பயன்படுத்த வேண்டும். தேவையற்ற அதிகாரத்துவக் கட்டுப்பாடுகளையும் குறைக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

அதோடு, திட்டங்களை மேம்பட்ட முறையில் ஒருங்கிணைத்து நிறைவேற்றுவதற்குக் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் அமைச்சர் சீ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
கட்டுமானம்நிறுவனம்சீ ஹொங் டாட்