ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்புக்கு $37 பில்லியன் ஒதுக்கீடு

3 mins read
6550b764-1cc8-4066-8048-05329f66b48e
டிசம்பர் 5ஆம் தேதி ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்பு 2030 செய்தியாளர் கூட்டத்தில் (இடமிருந்து) தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைவர் ஹெங் சுவீ கியட், மூத்த அமைச்சரும் ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்பு மன்றத்தின் தலைவருமான லீ சியன் லூங், தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் நிரந்தரச் செயலாளர் (தேசிய ஆய்வு மற்றும் மேம்பாடு) பேராசிரியர் டான் சோர் சுவான். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரின் ஆய்வுத் திறனின் வலிமை அதிகரித்து வரும் வேளையில், ​​சிங்கப்பூர் அடுத்த புத்தாக்க அலையை உருவாக்கி அதில் பயனடைய விழைகிறது. அந்த வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் $37 பில்லியன் நிதியைக்கொண்டு, புதிய கண்டுபிடிப்புகளைப் பணமாகவும் தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக மாற்றுவதற்கும் கடப்பாடு கொண்டுள்ளது.

நாடு படிப்படியாக மூப்படைந்து வருவதால், மக்கள் தொகையை ஆரோக்கியமாகவும் துடிப்பாகவும் வைத்திருப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்பு 2030 (ஆர்ஐஇ) திட்டத்தை விவரித்த மூத்த அமைச்சர் லீ சியன் லூங், “நமது பொருளியல் முதிர்ச்சி அடையும்போது, ஆய்வு மற்றும் புத்தாக்கம் அதிக முக்கியத்துவம் பெறும். இது பொருளியல் வளர்ச்சிக்கு உத்வேகத்தைக் கொடுப்பதோடு, தேசிய முன்னுரிமைகளையும் சவால்களையும் எதிர்கொள்ளவும் உதவும்,” என்றார்.

ஆர்ஐஇ திட்டம் என்பது சிங்கப்பூர் கவனம் செலுத்த வேண்டய முக்கிய அம்சங்கள், முன்னுரிமைப் பகுதிகள், திட்டங்களைக் கோடிட்டுக் காட்டும் ஓர் உத்திபூர்வ வரைபடமாகும். இது அதன் ஆய்வுத் திறன்களை மேலும் வலுப்படுத்தவும், தாக்கத்தை ஏற்படுத்தும் கண்டுபிடிப்புகளை இயக்கவும், சிங்கப்பூருக்கான துடிப்பான ஆற்றலுடைய சுற்றுச்சூழலை வளர்க்கவும் உதவுகிறது.

புதிய ஒதுக்கீட்டுத் தொகை, தற்போதைய ஆர்ஐஇ2025 நிதியான $28 பில்லியனைவிட 32 விழுக்காடு அதிகமாகும். இது ஏப்ரல் 2026 முதல் தொடங்குகிறது. மேலும் முந்தைய ஆண்டுகளைப் போலவே, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ஒரு விழுக்காடு.

இது சிங்கப்பூரை, சுவீடன், டென்மார்க் போன்ற மற்ற சிறிய முன்னேறிய பொருளியல் நாடுகளுடன் சமநிலையில் வைத்துள்ளது.

ஆர்ஐஇ2030 நிதியுதவியின் இந்தப் புதிய ஒதுக்கீட்டுத் தொகையிலிருந்து, இரண்டு புதிய உயர்மட்ட ஆய்வுத் திட்டங்களைத் தொடங்க $3 பில்லியன் ஒதுக்கப்படும். அதில் தேசிய உத்திபூர்வ முன்னுரிமைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ‘ஆர்ஐஇ கிராண்ட் சேலஞ்சஸ்’, பொருளியல் மதிப்பை உருவாக்குவதற்கு உந்துதல் அளிக்கும் ‘ஆர்ஐஇ ஃபிளாக்ஷிப்ஸ்’ ஆகிய திட்டங்களும் அடங்கும்.

முதலாவது ‘கிராண்ட் சேலஞ்ச்’ திட்டம், குறிப்பாக மூப்படையும் மக்கள்தொகையில் நிலவும் மூளைச் சுகாதாரம் மற்றும் உடல் செயல்பாட்டைப் பராமரிப்பதில் கவனம் செலுத்தும்.

இன்று, சிங்கப்பூரர்கள் தாங்கள் ஆரோக்கியமாக இருக்கும் காலத்தைவிட சுமார் 11 ஆண்டுகள் அதிகமாக வாழ்கிறார்கள். 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில், சுமார் 8.8 விழுக்காட்டினர் நினைவாற்றல் இழப்பு நோயுடன் வாழ்கிறார்கள். 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் இந்த எண்ணிக்கை சுமார் 50 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதைத் தவிர, ‘ஆர்ஐஇ ஃபிளாக்‌ஷிப்ஸ்’ திட்டம் பகுதிமின்கடத்திகள் மீது கவனம் செலுத்தும். சிங்கப்பூரை ஓர் உத்திபூர்வ முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையமாக நிறுவும் நோக்கத்துடன் இந்தத் துறை அமையும்.

“திறமையின் அகலமும் ஆழமும்தான் மிக முக்கியமான வெற்றிக் காரணி. நமது திறனாளர் தளத்தைத் தொடர்ந்து வளர்த்து வரும் அதே வேளையில், நமது கலவையான ஆற்றலையும் நாம் பன்முகப்படுத்துவோம். அடிப்படை ஆய்வில் கவனம் செலுத்தும் விஞ்ஞானிகளுக்கு அப்பால், அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் பலரை நாங்கள் ஒன்று சேர்ப்போம்,” என்று தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைவர் ஹெங் சுவீ கியட் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

குறிப்புச் சொற்கள்