38 ஆக்ஸ்லி சாலை வளாகம் இனி தேசிய நினைவுச்சின்னம்

2 mins read
3aaf46cc-7b32-4e85-86e2-7536daa92f76
38 ஆக்ஸ்லி சாலையில் உள்ள இந்த வளாகத்தில் போருக்கு முந்தைய ஒற்றை மாடி பங்களா உள்ளது. இது சிங்கப்பூரின் முதலாவது பிரதமர் லீ குவான் யூவின் குடும்ப இல்லமாக இருந்தது. - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரை நிறுவிய தலைவர்களுக்கிடையேயான முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெற்ற 38 ஆக்ஸ்லி சாலையில் உள்ள வளாகம், தேசிய நினைவுச்சின்னமாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாக கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சும் தேசிய மரபுடைமைக் கழகமும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) அன்று அறிவித்துள்ளன.

இந்த அறிவிப்பு சனிக்கிழமை (டிசம்பர் 13) முதல் அமலுக்கு வருகிறது.

இந்த வளாகத்தில் போருக்கு முந்தைய ஒற்றை மாடி பங்களா உள்ளது. இது சிங்கப்பூரின் முதலாவது பிரதமர் லீ குவான் யூவின் குடும்ப இல்லமாக இருந்தது. 1940களின் நடுப்பகுதியிலிருந்து 2015ல் அவர் இறக்கும் வரை அங்கு வசித்து வந்தார்.

பங்களாவின் அடித்தள உணவு அறையில்தான், மக்கள் செயல் கட்சியின் முன்னோடித் தலைவர்கள் 1950களில் ஓர் அரசியல் கட்சியை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளைப் பரிசீலிக்க கூட்டங்கள் நடத்தினர்.

அந்தத் தேதியிலிருந்து, அந்த வளாகத்தின் உரிமையாளரான திரு லீயின் இளைய மகன் திரு லீ சியன் யாங்கிற்கு, ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் அவற்றைச் சமர்ப்பிக்க இரண்டு வாரங்கள் அல்லது நவம்பர் 17 வரை அவகாசம் வழங்கப்பட்டது.

நவம்பர் 17 அன்று தேசிய மரபுடைமைக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், திரு லீ சியன் யாங்கிடமிருந்து எழுத்துபூர்வ ஆட்சேபனைகளைப் பெற்றதாகக் கூறினார். திரு சியன் யாங் அதே நாளில் தனது ஆட்சேபனைகளை ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டார்.

தனது ஆட்சேபனைகளில், திரு சியன் யாங், 38 ஆக்ஸ்லி சாலை வளாகத்தை நினைவுச்சின்னமாக்குவது, “லீ குவான் யூவை, மக்கள் செயல் கட்சி அவமதித்ததற்குச் சமம்,” என்று கூறினார். மேலும் அந்த வீடு இடிக்கப்பட வேண்டும் என்ற தனது தந்தையின் விருப்பத்தையும் அவர் மேற்கோள் காட்டினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கலாசார, சமூக, இளையர்துறையின் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ கூறினார். 1950களில் சிங்கப்பூர் ஒரு காலனித்துவத்திலிருந்து சுதந்திர நாடாக மாறியதைக் குறிக்கும் முக்கிய நிகழ்வுகளுக்குச் சாட்சியாக 38, ஆக்ஸ்லி சாலை வளாகம் இருந்தது என்றும் அவர் எடுத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்