கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெங்கா நீர்த்தேக்கம் கட்டிமுடிக்கப்பட்டதாகவும் அதற்கான கட்டுமானச் செலவு 120 மில்லியன் வெள்ளி என்றும் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
புதிதாகக் கட்டப்பட்ட தெங்கா நீர்த்தேக்கத்தால் 42,000 குடும்பங்களின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.
தெங்கா நீர்த்தேக்கம் 2026ஆம் ஆண்டு இறுதியிலிருந்து தனது சேவையைத் தொடங்கும். அதன்பிறகு அது சிங்கப்பூரில் உள்ள 10க்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்களுடன் இணைந்து செயல்படும்.
சிங்கப்பூரின் தண்ணீர் விநியோகக் கட்டமைப்புக்கு நீர்த்தேக்கங்கள் மிக முக்கியமானதாக உள்ளன. பொதுப் பயனீட்டுக் கழகத்தால் சுத்திகரிக்கப்பட்ட நீரைச் சேமித்துவைத்து வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ள நீர்த்தேக்கங்கள் உதவுகின்றன.
“சிங்கப்பூரின் வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கும் பொருளியலுக்கும் உதவும் வகையில் நீர் மேலாண்மைத் திட்டங்கள் உள்ளன. அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக நீர்த்தேக்கங்களைக் கூறலாம்,” என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்தார்.
சிங்கப்பூர் அனைத்துலக தண்ணீர் வாரத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய துணைப் பிரதமர் கான் இக்கருத்தைக் கூறினார்.
“தெங்கா நீர்த்தேக்கத்திற்கான திட்டம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. நீண்ட கால பயனைக் கருத்தில் கொண்டு திட்டமிட்டு அதில் முதலீடு செய்யும் நடைமுறை இது. சிங்கப்பூரால் எவ்வளவு செய்யமுடியும் என்பதைக் காட்டுவதற்கு இவை செய்யப்படுவதில்லை. சரியான நேரத்தில் தேவைகளைப் பூர்த்தி செய்வதைக் கருத்தில் கொண்டு முன்னரே திட்டமிடப்படுகின்றன. இதனால் எதிர்காலத்தில் எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் சீராகச் செயல்பட முடியும்,” என்றார் திரு கான்.
தெங்கா நகரத்தில் அமைந்துள்ள தெங்கா நீர்த்தேக்கம் தற்போது கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டடங்களுக்கும் எதிர்காலத்தில் வரும் குடியிருப்பு மற்றும் தொழிற்பேட்டைகளுக்கும் உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டதாகும்.
தொடர்புடைய செய்திகள்
தெங்கா நீர்த்தேக்கத்தில் 22 ஒலிம்பிக் நீச்சல் குளத்திற்குத் தேவையான நீரைச் சேகரிக்க முடியும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் கூறுகிறது.
தெங்கா நீர்த்தேக்கத்தை சிலிப்பார்ம் (slipform) கட்டுமான முறையில் கட்டியதால் வேகமாகக் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டது.
மேலும் நீர்க்கசிவு குறைப்பு, சீரான நீர் விநியோகம் ஆகியவற்றுக்கு சிலிப்பார்ம் முறை சிறப்பானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

