பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 10 ஆடவர்கள், 37 பெண்கள் என 47 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாதர் சாசனம், சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டம், வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டம் ஆகியவற்றின்கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
டிசம்பர் 3 முதல் 6ஆம் தேதிவரை பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
டிசம்பர் 3, 4ஆம் தேதிகளில் வாம்போ, தோ பாயோ, ஆர்ச்சர்ட் சாலை வட்டாரங்களில் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வாம்போவில் உள்ள ஒரு காப்பிக் கடையிலும் தோ பாயோவிலும் சட்டத்துக்குப் புறம்பாகச் சூதாட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒன்பது ஆடவர்களும் இரு பெண்களும் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் 59 வயதுக்கும் 88 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
ஏறத்தாழ $5,000 ரொக்கம், திறன்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களில் ஒருவர் வைத்திருந்த கத்தியும் கைப்பற்றப்பட்டது. இது தண்டனைச் சட்டத் தொகுப்பு 1871ன்படி குற்றமாகும்.
தொடர்ந்து ஆர்ச்சர்ட் சாலையிலுள்ள கேளிக்கை விடுதியிலும் அமலாக்க நடவடிக்கைகள் இடம்பெற்றன. 20 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்ட 26 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
டிசம்பர் 5, 6ஆம் தேதிகளில் குடியிருப்பு, வணிக வளாகங்கள், உடற்பிடிப்பு நிலையங்களில் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
நொவீனா, பாலஸ்டியர், கிம் கியட் ரோடு, ராபர்ட்சன் கீ ஆகிய வட்டாரங்களில் 21 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்ட ஒன்பது பெண்களும் ஓர் ஆடவரும் கைதாயினர்.
தங்ளின் காவல்துறைப் பிரிவு தலைமையில், சுகாதார அறிவியல் ஆணையம், குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவை இணைந்து இந்நடவடிக்கைகளை மேற்கொண்டன.
காவல்துறையின் கண்காணிப்பைத் தொடர்ந்து இந்நடவடிக்கைகளுக்குத் திட்டமிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அமலாக்க நடவடிக்கையைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தங்ளின் காவல்துறைப் பிரிவின் மூத்த உதவி ஆணையர் சியோங் சீ மிங், “சட்டவிரோத குற்றச்செயல்களைத் தடுக்க தங்ளின் காவல்துறைப் பிரிவு மேற்கொண்டுவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தக் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,” என்றார்.
காவல்துறை தொடர்ந்து பிற அமைப்புகளுடன் இணைந்து குற்றங்களைத் தடுத்து, சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், குற்றவாளிகள்மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணை தொடர்கிறது.

