சிங்கப்பூரில் பதிவான கார் ஒன்றை 58 வயது ஆடவர் ஒருவர், உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்கு ஜனவரி 20ஆம் தேதி இரவு 11 மணியளவில் ஓட்டி வந்தபோது $628,000க்கும் அதிக மதிப்புடைய போதைப்பொருள் காரில் கண்டுபிடிக்கப்பட்டது.
சிங்கப்பூரரான அந்த ஆடவர் உடனே கைதுசெய்யப்பட்டார்.
காரை மேலும் தீவிரமாகச் சோதனையிட்டதில் ஓட்டுநர் இருக்கையின் கீழ் போதைப்பொருள் கொண்ட 10 கறுப்புப் பொட்டலங்களையும் ஓட்டுநருக்குப் பக்கத்து இருக்கையின் கீழ் மேலும் ஐந்து பொட்டலங்களையும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய (ஐசிஏ) அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் கொண்ட பொட்டலங்கள் என்று சந்தேகிக்கப்பட்டதால் ஆடவர் உடனே கைது செய்யப்பட்டு, மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) மேற்கொண்டு விசாரிக்க வழக்கு ஒப்படைக்கப்பட்டதாகக் கூட்டு அறிக்கைவழி ஐசிஏ, சிஎன்பி இரண்டும் தெரிவித்தன.
ஹெராயின், ஐஸ், எக்ஸ்டசி, எரிமின்-5 மாத்திரைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்த பொட்டலங்களின் மதிப்பு $628,000க்கும் மேல் என்று பின்னர் கண்டறியப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் அளவு, ஒரு வார காலத்திற்குச் சுமார் 2,700 போதைப்புழங்கிகளின் பயன்பாட்டுக்குச் சமம் என்று கூறப்படுகிறது.
போதைப்பொருளுடன் $48.60 சிங்கப்பூர் வெள்ளியும் 1,640.90 மலேசிய ரிங்கிட்டும் சிக்கின.

