சிறப்புப் படை அதிகாரியாகப் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தபோது தமது குழுவினருடன் மீட்பு படகு ஒன்றை அமைத்துக்கொண்டிருந்தபோது சந்தித்த சவால்களை ‘மூன்றாம் சார்ஜண்ட்’ டி சு ஜெயன், 19, நினைவுகூர்ந்தார்.
“கடுமையான பயிற்சியின்போது நேர நெருக்கடியை எதிர்கொண்டவாறே சொற்பமான பொருள்களைக் கொண்டு படகை அமைத்திருந்தோம். பதற்றமிகு சூழலில் இருந்தபோதும் ஒருவருக்கொருவர் தந்த ஊக்கமும் நம்பிக்கையும் இறுதியில் நம் வெற்றியை விளைவித்தன, ” என்று ஜெயன் கூறினார்.
நவம்பர் 20ல் (வியாழன்) நடந்தேறிய 65/25 சிறப்புப் படை அதிகாரி பயிற்சிப் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற அதிகாரிகளில் டி.சு. ஜெயனும் ஒருவர்.
இவ்விழாவில் மொத்தம் 905 பேர் சிறப்புப் படை அதிகாரி பயற்சிக்குத் தகுதிபெற்றனர்.
பட்டம் பெற்றவர்களில் சிங்கப்பூர் ராணுவத்திலிருந்து 804 பேரும், சிங்கப்பூர் குடியரசுக் கடற்படையிலிருந்து 29 பேரும், சிங்கப்பூர் குடியரசுக் விமானப்படையிலிருந்து 13 பேரும், மின் உளவுத்துறை சேவையிலிருந்து 59 பேரும் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் 22 வார சிறப்புப் படை அதிகாரி பயிற்சியை முடித்துள்ளனர்.
நிகழ்ச்சியைச் சிறப்பித்த வெளியுறவு, வர்த்தக, தொழில் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங், அதிகாரிகளாகத் தகுதிபெற்றவர்களைத் தமது உரையில் பாராட்டினார்.
“நீங்கள் மேற்கொண்ட இந்தப் பயணம் எளிதன்று. களத்தில் நீண்ட நாட்கள், கடும் சோதனைகள் ஏன், தளர்ச்சிகூட நீங்கள் உணர்ந்திருக்கலாம்.”
தொடர்புடைய செய்திகள்
“ஆயினும் அசையாத மன உறுதி, கூட்டுமுயற்சி, கட்டொழுங்கு ஆகியவற்றால் வலிமைமிக்கவர்களாக, திறனாளர்களாக, மீள்திறன் கொண்டவர்களாக உருமாறி, தலைமைப் பொறுப்புகளை ஏற்கும் தகுதியைப் பெற்றுவிட்டீர்கள்,” என்று திருவாட்டி கான் கூறினார்.
இன்றைய பட்டமளிப்பு நிகழ்ச்சி அதிகாரிகளின் பயிற்சிக் காலத்தின் முடிவை மட்டுமல்ல, அவர்களின் பயணத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது என்றும் திருவாட்டிகான் கூறினார்.
இந்த ஆண்டு ‘எஸ்ஜி60’ , சிங்கப்பூர் ஆயுதப்படை 60 ஆகியவற்றை நினைவுகூரும்போது, சிங்கப்பூரின் எதிர்காலமும் சிங்கப்பூர் ஆயுதப்படையின் எதிர்காலமும் எவ்வளவு நெருக்கமாகப் பிணைந்துள்ளன என்பதை மக்கள் அறிவார்கள் என்று திருவாட்டி கான் தெரிவித்தார்.
கடல்சார் அமைப்புகள் பொறியாளர் இயக்குநராக (Marine Systems Engineer Operator) பணியாற்றவிருக்கும் ஜெயன் அதற்காக தீவிரமாக பயற்சி செய்யப்போவதாக கூறினார்.
ராணுவப் பயிற்சிகளுக்காக பிற நாடுகளுக்குச் செல்லவிருக்கும் ஜெயன், தமது மேலாளர்களுடனும் உயரதிகாரிகளுடனும் திறன் மேம்பாடு குறித்துக் கலந்துரையாடப் போவதாகவும் கூறினார்.
“என் குழுவிற்கு மேலும் பயன்னுள்ளவராக என்னை எப்படித் தயார்செய்வது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டுவேன்,” என்று ஜெயன் கூறினார்.

