தான், 660 புதிய மின்சாரப் பேருந்துகளை வாங்கியுள்ளதாகவும், அவை 2026ஆம் ஆண்டின் இறுதி முதல் படிப்படியாக பயணிகள் சேவைக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (டிசம்பர் 15) தெரிவித்துள்ளது.
சட்டபூர்வ ஆயுட்காலம் முடிவடையும் டீசல் பேருந்துகளுக்குப் பதிலாகப் புதிய மின்சாரப் பேருந்துகள் பயன்படுத்தப்படும் என்று ஆணையம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தது.
புதிய மின்சாரப் பேருந்துகளுக்கு ஆறு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இதில் 360 ஓரடுக்குப் பேருந்துகளும் 300 ஈரடுக்குப் பேருந்துகளும் அடங்கும்.
முதலாவது பெரிய அளவிலான மின்சார ஈரடுக்குப் பேருந்துகளை ஆணையம் வாங்குவதை இது குறிக்கிறது.
“2040ஆம் ஆண்டுக்குள் 100 விழுக்காடு தூய்மையான எரிசக்திப் பேருந்து அணியை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்,” என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
“2030ஆம் ஆண்டுக்குள், மின்சாரப் பேருந்துகள் நமது பொதுப் பேருந்து அணியில் பாதியளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆண்டுகளில் மின்சாரப் பேருந்துகளுக்கான கூடுதல் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும்,” என்று அது மேலும் கூறியது.
ஒப்பந்தங்கள் எஸ்டி இன்ஜினியரிங் மொபிலிட்டி சர்வீசஸ், பிஒய்டி, யுடோங் அண்ட் சைக்கிள் & கேரேஜ் ஆட்டோமோட்டிவ் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.
எஸ்டி இன்ஜினியரிங் நிறுவனம் 100 மின்சார ஓரடுக்குப் பேருந்துகளையும் 150 மின்சார ஈரடுக்குப் பேருந்துகளையும் முறையே S$35.7 மில்லியன் (US$27.6 மில்லியன்) மற்றும் S$79 மில்லியன் ஒப்பந்தத் தொகையில் வழங்கும்.
தொடர்புடைய செய்திகள்
பிஒய்டி (சிங்கப்பூர்) நிறுவனத்திற்கு முறையே 160 மின்சார ஓரடுக்குப் பேருந்துகளோடு 50 மின்சார ஈரடுக்குப் பேருந்துகளுக்கான ஒப்பந்தத் தொகை சுமார் S$71.3 மில்லியன் மற்றும் S$34.5 மில்லியன் என ஏற்கப்பட்டது.
சைக்கிள் & கேரேஜ் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் 100 மின்சார ஈரடுக்குப் பேருந்துகளை S$57.8 மில்லியனுக்கு வழங்கும்.
யுடோங் அனைத்துலக வர்த்தகம் - யுடோங் பஸ் கூட்டமைப்புக்கு 100 மின்சார ஓரடுக்குப் பேருந்துகளுக்கான S$43.9 மில்லியன் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
புதிய மின்சாரப் பேருந்துகளில் பயணிகள் தகவல் அறிவிப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட மின்கலத் தொழில்நுட்பம் போன்றவை அடங்கும்.
மோதல் எச்சரிக்கை, ஓட்டுநர் சோர்வு எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்பு, கேமரா கண்ணாடி அமைப்பு போன்ற பேருந்து ஓட்டுநர்களுக்கு உதவும் பாதுகாப்பு அமைப்புகளும் அவற்றில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

