டான் யூ ஹோங் என்னும் ஆடவர் பொதுப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென பேருந்து ஓட்டுநர் வேகத்தை கட்டுப்படுத்தும் விசையை (பிரேக்) அழுத்தினார்.
அதனால் கீழே விழுந்த டானுக்கு இடுப்பு, முதுகெலும்பு, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
பேருந்து சென்றுகொண்டிருந்த பாதையில் திடீரென கார் வந்ததால் பேருந்து ஓட்டுநர் பிரேக்கை அழுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்நிலையில், டான் தமக்கு இழப்பீடு கிடைக்க வேண்டும் என்று கார் ஓட்டுநர் மீது வழக்குத் தொடுத்தார்.
வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை (நவம்பர் 13) அறிவிக்கப்பட்டது. அதில் கார் ஓட்டுநர் 78,444 வெள்ளி இழப்பீடாக டானுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.
விபத்துச் சம்பவம் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது.
டானுக்கு இடுப்பு மற்றும் முதுகெலும்பு பகுதியில் சிகிச்சை அளித்த பிறகு வலி இல்லை. இருப்பினும் அவரது தோள்பட்டையில் தொடர்ந்து வலி இருந்தது.
விபத்தால் ஏற்பட்ட நிதி இழப்புக்கும், எதிர்காலத்தில் தோள்பட்டைக்கான மருத்துவ செலவுக்கும் இழப்பீடு வேண்டும் என்று டான் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது.
தொடர்புடைய செய்திகள்
டான் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இறுதியில் 78,444 வெள்ளி இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

