கரையோரப் பூந்தோட்டம், புத்தர் பல் உள்ள பெளத ஆலயம் ஆகியவற்றுக்குச் சட்டவிரோதமாக வாகனச் சேவை வழங்கியதாக எட்டு ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவலைச் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டது.
ஆணையமும் சிங்கப்பூர் பயணத்துறை கழகமும் இணைந்து கடந்த வாரம் நடத்திய அமலாக்க நடவடிக்கையில் அந்த ஓட்டுநர்கள் சிக்கினர்.
போக்குவரத்து சேவைக்காகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்கள் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டவை.
ஓட்டுநர்களின் நடவடிக்கையை ஆராய்ந்தபோது அவர்கள் உரிமம் இல்லாமல் சுற்றுலாப் பயணிகளுக்குச் சேவை வழங்கியுள்ளது உறுதியானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் இதுபோன்ற சட்டவிரோதப் பயணச் சேவைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் கேட்டுக்கொண்டது.
தகுந்த உரிமம் மற்றும் காப்பீடு இல்லாமல் செயல்படுவர்ளிடம் பயணம் மேற்கொள்வது ஆபத்தானது. குறிப்பாக விபத்துகள் ஏற்பட்டால் நிலைமை மோசமாகும் என்றும் அது குறிப்பிட்டது.
உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக வாகனச் சேவை வழங்குவோருக்கு 3,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

