சிங்கப்பூரில் அறிவிக்கப்படாத எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகே சொத்து வாங்கியது குறித்து நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பிறகு எட்டுப் பொதுச் சேவை அதிகாரிகள் குறித்து காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டதாக பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய பொருளியல் ஆராய்ச்சி மையம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களை அது அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
2011ஆம் ஆண்டுக்குப் பிறகும் பல புதிய எம்ஆர்டி நிலையங்களின் இருப்பிடங்கள் குறித்துத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பொதுச் சேவைத் துறை அந்த ஆய்வின் வரம்பை 2014ஆம் ஆண்டு வரை விரிவுபடுத்தியதாகத் திரு சான் கூறினார்.
நிர்வாகப் பதிவுகளின் அடிப்படையில், ரயில் போக்குவரத்துத் திட்டமிடலில் ஈடுபட்டிருந்த அமைப்புகளில் பணியாற்றிய அதிகாரிகள் 2007 முதல் 2014 வரை, பின்னர் எம்ஆர்டி நிலையங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் சொத்துகளை வாங்கியிருப்பதை அந்தத் துறை அடையாளம் கண்டதாக அவர் தெரிவித்தார்.
மொத்தம் 191 அதிகாரிகளின் சொத்துப் பரிவர்த்தனைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பிறகு, எட்டுப் பேர் மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் எனக் கண்டறியப்பட்டதால் அது பற்றி காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார் தற்காப்பு அமைச்சருமான திரு சான்.
“இந்த விவகாரம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்பதற்காகக் குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தமல்ல. நடந்தவற்றைக் காவல்துறை சுதந்திரமாக விசாரித்து அதற்கேற்ப உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள பாதுகாப்பு நடைமுறைகளின் செயல்திறன் மற்றும் சரிசெய்யப்பட வேண்டிய குறைபாடுகள் குறித்து ஆய்வு வெளிப்படுத்தும் தகவல்களை அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார்.
நடப்பிலுள்ள பாதுகாப்பு நடைமுறைகள்
வழக்கமான சோதனைகளை அதிகரிப்பது, சொத்து அறிவிப்புத் தேவைகளைக் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உடன் குடியிருப்பவர்களுக்கும் விரிவுபடுத்துவது போன்ற கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவையா என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
பொதுச் சேவைத் துறை தனது விதிகளைத் தொடர்ந்து மறுஆய்வு செய்து வருவதோடு, காலப்போக்கில் அவற்றை வலுப்படுத்தியும் உள்ளது என்று திரு சான் கூறினார்.
“தற்போதைய ஆய்வு அதன் செயல்திறன் குறித்து நமக்கு உணர்த்துவதையும் சரிசெய்யப்பட வேண்டிய குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் பரிசீலிப்போம்.
“வலுவான பாதுகாப்பு நடைமுறைகள் இருந்தாலும், எந்தவோர் அமைப்பாலும் தவறுகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை முழுமையாக அகற்ற முடியாது. எனவே தவறு நிகழ்வதற்கான வாய்ப்புகளைக் குறைக்கவும் தவறுகளைக் கண்டறிவதற்கான பயனுள்ள வழிகளை நிர்வகிக்கவும் வேண்டும்,” என்றும் திரு சான் கூறினார்.
