இலவசப் பழங்கள், காய்கறிகள் விநியோகத்தை தாமான் ஜூரோங் சமூக மன்றம் ரத்து செய்தது. இந்த நிகழ்வு மே 7, 21ஆம் தேதிகளில் நடைபெற இருந்தது. ஆனால் தாமான் ஜூரோங் குடியிருப்பாளர்கள் வரிசையில் நிற்பதற்குப் பதிலாக இடத்தை ‘சோப்’ (முன்பதிவு) செய்தனர். நீண்ட வரிசையில் தங்களுக்குச் சொந்தமான பொருள்களை வைத்தனர்.
தள்ளுவண்டிகள், நாற்காலிகள், அட்டைப்பெட்டிகள் போன்றவை அவற்றில் அடங்கும். மேலும், இலவசப் பழங்கள், காய்கறிகளை அதிகபட்சமாகப் பெற குடியிருப்பாளர்கள் தங்கள் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துச் சென்றதாக வழிப்போக்கர் ஒருவர் ஷின்மின் நாளிதழிடம் தெரிவித்தார்.
இத்தகைய நடத்தை ஏற்புடையதல்ல என்றும் வசதி குறைந்தோருக்கு இலவசப் பழங்கள், காய்கறிகள் கிடைக்காமல் போகக்கூடும் என்றும் வழிப்போக்கர் தெரிவித்தார். தாமான் ஜூரோங் சமூக மன்றத்தில் இலவசப் பழங்கள், காய்கறிகள் விநியோகம் இனி நடைபெறாது என்று தாமான் ஜூரோங் காக்கிஸ் ஃபேஸ்புக் குழு மே 21ல் பதிவிட்டது.
மே 21ஆம் தேதியன்று பிற்பகல் 2.30 மணிக்கு இலவசப் பழங்களும் காய்கறிகளும் விநியோகம் செய்யப்பட இருந்தன. ஆனால் அதற்கு பத்து மணி நேரத்துக்கு முன்பே சிலர் வரிசையில் நிற்கத் தொடங்கினர்.
பிற்பகல் 1 மணிக்குள் நீண்ட வரிசை உருவானது. ஆனால் குடியிருப்பாளர்கள் யாரும் இல்லை. அவர்களுக்குப் பதிலாக அவர்களின் பொருள்கள் இடத்தை நிரப்பின. மேலும், சில வெளிநாட்டுப் பணியாளர்களும் வரிசையில் நின்றனர். அவ்விடத்தில் ஒழுங்கற்ற, குழப்பமிக்க சூழல் நிலவியதாக குடியிருப்பாளர் ஒருவர் குறைகூறினார்.