நீதிமன்றத்தின் நேரத்தை விரயமாக்கும் வழக்குகளைத் தொடுப்பது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஆகியவை நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகக் கூடிய விரைவில் எடுத்தக்கொள்ளப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்பவர்களுக்கு சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.
தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று தெரிந்தும் இன்னொருவருக்குத் தொல்லை விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வேண்டுமென்றே வழக்கு தொடுப்பவரும் இதில் அடங்குவர்.
குற்றவியல் வழக்கு விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கில் பொய் கூறி திசை திருப்புவது, தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஆகியவை இதில் அடங்கும்.
நீதிமன்றத்தின் நேரத்தை விரயமாக்கும் போக்கு அண்மை காலங்களில் சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் கவனிக்கப்பட்டுள்ளதாக நவம்பர் மாதம் சட்ட துணை அமைச்சர் முரளி பிள்ளை 13ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“சிங்கப்பூர் நீதிமன்றங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிடில் சிங்கப்பூர் நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்துவிடும். சிங்கப்பூர் நீதிமன்றங்களின் செயல்முறைகளைச் சிலர் தங்களுக்குச் சாதகமாக, தவறான முறையில் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம்,” என்றார் திரு முரளி பிள்ளை.
நீதிமன்றங்களில் நேரத்தை விரயமாக்கும் இத்தகைய பிரச்சினைகள் வெளிநாடுகளில் வெவ்வேறு வடிவங்களில் இருப்பதைத் திரு முரளி பிள்ளை சுட்டினார்.
வாழ்க்கைத் துணையுடனான உறவு முறிந்ததும் அவர்களை அச்சுறுத்த, கட்டுப்படுத்த, தொந்தரவு செய்ய நீதிமன்றத்தை தவறாகப் பயன்படுத்துவதும் இதில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
“இத்தகைய போக்குகள் இருப்பதைக் கவனித்த பிறகு, சிங்கப்பூரின் நீதித்துறையைப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க நேரம் கனிந்துவிட்டது என்று முடிவெடுத்துள்ளோம். நாட்டின் நீதித்துறையைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது,” என்று திரு முரளி பிள்ளை தெரிவித்தார்.

