சிங்கப்பூர், மலேசிய ஆர்டிஎஸ் நிலையங்களில் பாவனைப் பயிற்சி

சிங்கப்பூர், மலேசிய ஆர்டிஎஸ் நிலையங்களில் பாவனைப் பயிற்சி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

28 Nov 2026 - 11:56 am

2 mins read

புத்ராஜெயா: ஜோகூர் பாருவில் தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு அமைப்பின் முழுமையான செயல்பாட்டுப் பாவனைப் பயிற்சி நடைபெறும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

புக்கிட் சாகர் விரைவுப் போக்குவரவு அமைப்பு (ஆர்டிஎஸ்) நிலையத்தில், டிசம்பர் 1ஆம் தேதிமுதல் 15ஆம் தேதிவரை இப்பயிற்சி நடைபெறும்.

சிங்கப்பூர்த் தரப்பில், உட்லண்ட்ஸ் ஆர்டிஎஸ் நிலையத்தில் டிசம்பர் 16ஆம் தேதிமுதல் 30ஆம் தேதிவரை இப்பாவனைப் பயிற்சி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஜோகூர் பாரு - சிங்கப்பூர் ஆர்டிஎஸ் இணைப்புச் சேவைகள் தொடங்குவதற்கு முன்னதாக, அமைப்புகள், ஊழியர்கள், குடிநுழைவுச் சோதனை வசதிகளின் தயார்நிலையை உறுதிசெய்ய இது நடத்தப்படுகிறது.

அனைத்துக் குடிநுழைவுச் சோதனை, அனுமதி விவகாரங்களுக்கும் புக்கிட் சாகர் நிலையம் தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு அமைப்பை முழுமையாகப் பயன்படுத்தும்.

இது, தேசிய எல்லை நிர்வாகத்தின் மின்னிலக்க உருமாற்றத்தில் மற்றொரு முக்கியப் படியாகும் என அமைச்சு குறிப்பிட்டது.

செயலியின் பயன்பாடு, விரைவுத் தகவல் குறியீடுகள் (கியூஆர்), தானியக்கக் கதவுகள் ஆகியவற்றின் நிலைத்தன்மையைச் சோதிப்பதும், மலேசியா - சிங்கப்பூர் இடையிலான சுங்க, குடிநுழைவு, தனிமைப்படுத்தல் வசதிகளின் ஒரே இட அமைவுக் கோட்பாட்டின்கீழ் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை ஒருங்கிணைப்பதும் இப்பயிற்சியில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

சேவை தொடங்கும்போது எல்லை தாண்டிய பயணத்தை எளிதாக்க, வருங்கால ஆர்டிஎஸ் இணைப்புப் பயனர்கள் ‘மைநைஸ்’ எனும் செயலியைப் பதிவிறக்கம் செய்து முன்கூட்டியே பதிவுசெய்ய ஊக்குவிப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

தற்போது சோதனைக் கட்டத்தில் உள்ள இவ்வமைப்பு, நேரடிக் கடப்பிதழ் அல்லது மலேசிய மின்னிலக்க வருகை அட்டை மூலம் கியூஆர் குறியீட்டை வருடி குடிநுழைவுச் சோதனையை நிறைவேற்ற உதவும்.

குறிப்புச் சொற்கள்
ஆர்டிஎஸ்மலேசியாஜோகூர் பாரு