நடையர்களை வெயில், மழையிலிருந்து பாதுகாக்க கட்டட மேம்பாட்டாளர்கள் இனி அகலமான கூரை விளிம்புகளையும் வெயில் தடுப்பு அமைப்புகளையும் கட்டலாம் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
அதற்கான இடம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட மொத்தத் தளப் பரப்பளவில் கணக்கிடப்படாது.
பருவநிலை மாற்றத்தால் கடும் வெப்பமும் கனமழையும் அதிகரிக்கும் என எநrerதிர்பார்க்கப்படுவதால், கூரை வேய்ந்த இணைப்புப் பாதைகள் உள்ளிட்ட சிறந்த நடையர் கூரைகளை அமைக்கக் கூடுதல் விலக்குகள் வழங்கப்படும்.
சிங்கப்பூர் சொத்து மேம்பாட்டாளர்கள் சங்கத்தின் 67வது ஆண்டுவிழா விருந்து வியாழக்கிழமை (நவம்பர் 26) நடந்தது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அத்தகவலைத் திரு சீ வெளியிட்டார்.
சிங்கப்பூரின் வெப்பமண்டலப் பருவநிலையில் இத்தகைய வசதிகள் முக்கியமானவை என்றார் அவர். அதன்படி, தளப் பரப்பளவு விலக்கு பெறும் கூரை விளிம்புகள், வெயில் தடுப்பு அமைப்புகளின் அகலம் 2 மீட்டரிலிருந்து 3 மீட்டராக உயர்த்தப்படும்.
பாதுகாக்கப்பட்டவை அல்லாத கட்டடங்களின் உரிமையாளர்கள், நடப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இவ்வசதிகளைச் சேர்க்க நகர சீரமைப்பு ஆணையத்தின் அனுமதியைப் பெறத் தேவையில்லை.
புதிய கூரை வேய்ந்த இணைப்புப் பாதைகள் தளப் பரப்பளவு விலக்கு பெற இனி பசுமைப் பகுதியின் அங்கமாக இருக்கத் தேவையில்லை. இதனால் கட்டடங்களில் வசிப்போர், வருகையாளர்களின் தேவைக்கேற்பக் கூரைப் பாதைகளை அமைப்பது எளிதாகும்.
இந்த இரு மாற்றங்களும் நவம்பர் 26ஆம் தேதி முதல் உடனடியாக நடப்புக்கு வருகின்றன. ஆயினும், நகரத்தைப் பசுமையாக்கும் முயற்சிகள் பாதிக்கப்படாமல் இருக்க, நடப்பிலுள்ள பிற பசுமை விதிமுறைகள் தொடரும்.
மேலும், காற்றோட்டம், குளிரூட்டி போன்ற கட்டட அமைப்புகளுக்கான இயந்திர, மின்சார இடங்களுக்கு வழங்கப்படும் விலக்கு அனைத்து அடித்தளத் தளங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இதுவரை அடித்தள வாகன நிறுத்துமிடங்களில் மட்டுமே இந்த விலக்கு இருந்தது. இதன்மூலம் தரைத்தள இடத்தை மேம்பாட்டாளர்கள் மிகவும் பயனுள்ள வழிகளில் பயன்படுத்தலாம்.
கூரை வேய்ந்த வெளிப்புற விளையாட்டு வசதிகளுக்கான தளப் பரப்பளவு விலக்கு குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இம்மாற்றங்கள் கட்டட மேம்பாட்டாளர்களுக்கும் கட்டட உரிமையாளர்களுக்கும் கூடுதல் நீக்குப்போக்குத் தன்மையை வழங்கும் என்று திரு சீ கூறினார்.
