கூடுதல் எம்.பி: தெம்பனிஸ் குடிமக்களின் தேவைகளை மேலும் சிறப்பாக பூர்த்திசெய்ய முடியும் என்கிறார் அமைச்சர் மசகோஸ்

2 mins read
49a06d0a-2a02-4f22-8ebe-bd7b68e0598d
அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி. - கோப்புப் படம்: பெரித்தா ஹரியான்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெம்பனிஸ் சங்காட் தனித் தொகுதியிலிருந்து கிடைக்கும் கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினரால் தெம்பனிஸ் மக்களின் தேவைகளுக்கு மக்கள் செயல் கட்சி மேலும் சிறப்பாக சேவை ஆற்ற முடியும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.

மார்ச் 13ஆம் தேதி ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்த பதிவில், கூடுதல் உறுப்பினரால் தெம்பனிஸ் சங்காட்டின் குறிப்பிட்ட அக்கறைக்குரிய அம்சங்களில் கவனம் செலுத்த முடியும் என்று குறிப்பிட்டார்.

மார்ச் 11ம் தேதியன்று தேர்தல் எல்லைகள் மறுபரிசீலனைக் குழு தொகுதிகளின் எல்லை மாற்றங்களை அறிவித்தது.

அப்போது அல்ஜுனிட் குழுத் தொகுதியிலிருந்து சில பகுதிகள் தெம்பனிஸ் குழுத் தொகுதியில் சேர்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதோடு தெம்பனிசிலிருந்து தெம்பனிஸ் சங்காட் தனித் தொகுதியாகப் பிரிக்கப்பட்டது. இதில், ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் உள்ள சில தேர்தல் வட்டாரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

தெம்பனிஸ் குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சி அணிக்குத் தலைமை வகிக்கும் அமைச்சரான திரு மசகோஸ், புதிய தெம்பனிஸ் சங்காட் தொகுதி, தெம்பனிஸ் குடும்பத்திற்குள்தான் இருக்கும் என்று கூறினார்.

அதாவது, தெம்பனிசில் ஐவர் கொண்ட குழுத் தொகுதியும் தனித்தொகுதியும் இடம்பெற்று இருக்கும்.

கூடுதலாக ஓர் உறுப்பினர், தெம்பனிஸ் குடிமக்களுக்கு சிறந்த வகையில் சேவையாற்ற வழி வகுக்கிறது என்றார் அவர்.

“தெம்பனிசின் உயிரோட்டமான வாழ்க்கையைத் தொடர்ந்து மேம்படுத்த நாங்கள் கடப்பாடு கொண்டிருக்கிறோம்,” என்று பசுமையும் மற்ற வட்டாரங்களுடன் நன்கு இணைக்கப்படுதலும் குடிமக்களுக்கான துடிப்பான நகரத்தை உருவாக்குவதுமான ஐந்து ஆண்டு பெருந்திட்டத்தை வெளியிடும்போது திரு மசகோஸ் கூறினார்.

பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக தெம்பனிஸ் சங்காட் இருக்கும் என்ற அவர், சனிக்கிழமை (மார்ச் 15), நமது தெம்பனிஸ் நடுவத்தில், தெம்பனிஸ் எஸ்ஜி60 பராமரிப்புப் பற்றுச்சீட்டு வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு பலதரப்பட்ட குடியிருப்பு வட்டார மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் நீலநிற சாஸ் அட்டை வைத்திருக்கும் தெம்பனிஸ் குடிமக்களுக்கு அன்றாட தேவைகளைச் சமாளிக்க உதவ $60 ‘ஷாப்பி’ பற்றுச்சீட்டு வழங்கப்படவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்