உலகளவில் கணக்கியல் அமைப்புகள் புதிய திறனாளர்களை ஈர்ப்பதில் தொடர்ந்து சிரமப்பட்டாலும் சிங்கப்பூரில் கணக்கியல் துறை இப்போது வளர்ச்சிப் பாதையில் உள்ளது.
இத்துறையில் கூடுதலான புதுமுகங்கள் சேர்வதால் சிங்கப்பூரில் உள்ள கணக்கியல் நிறுவனங்கள், பல ஆண்டுகளாக இத்துறையை பாதித்துவரும் மனிதவளப் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வுகாண முடியும்.
சிங்கப்பூர் பட்டயக் கணக்காளர்கள் கழகத்தின் தலைவர் டியோ செர் லக், பயிற்சியில் சேர்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
2024 டிசம்பர் 31 நிலவரப்படி, சிங்கப்பூர் பட்டய கணக்காளர் தகுதித் திட்டத்தில் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் மொத்த எண்ணிக்கை 4,200ஐக் கடந்தது. ஓராண்டுக்கு முன்பிருந்த ஒட்டுமொத்த சேர்க்கை எண்ணிக்கையிலிருந்து இது 47 விழுக்காடு அதிகம்.
சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் கணக்கியல் துறையில் சேர்ந்து பயில மாணவர்கள் கூடுதல் ஆர்வம் காட்டி வருவதை திரு டியோ குறிப்பிட்டார்.
ஆக அண்மைய மாணவர் சேர்க்கைகளில், வெற்றிகரமான விண்ணப்பதாரர்கள் அனைவரும் கணக்கியல் படிப்பை தங்கள் முதல் தேர்வுப் பாடமாகத் தேர்ந்தெடுத்துள்ளதை சில பல்கலைக்கழகங்கள் சுட்டின. இது அண்மைய ஆண்டு நிலவரத்துடன் மாறுபடுகிறது.
சிங்கப்பூரில் உள்ள ஆறு தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களில் ஐந்து கணக்கியல் பாடங்களை வழங்குகின்றன.
கடந்த ஆண்டுதான் கணக்கியல் ஊழியரணி மறுஆய்வுக் குழு வெளியிட்ட அறிக்கையில், குறைவான மாணவர்கள் கணக்கியலை தங்கள் முதன்மைத் தெரிவாகத் தேர்வுசெய்து வந்தது கண்டறியப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வி நிலையிலும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
கணக்கியல், நிதித்துறையில் பட்டயம் பயில கூடுதலானோர் ஆர்வம் காட்டி வருவதாக தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பிரதிநிதி ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்திருந்தார்.