செயற்கை நுண்ணறிவு, புத்தாக்கமிக்க பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளபோதிலும் வேலைகள் மற்றும் வாழ்வாதாரத்தில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றி பலர் கவலைப்படுவதாக பிரதமர் லாரன்ஸ் வோங் ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 23) தெரிவித்தார்.
இதை எதிர்கொள்வதே உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சவால் என்று அவர் கூறினார்.
ஜி20 உச்சநிலை மாநாட்டில் பிரதமர் வோங் இக்கருத்துகளை முன்வைத்தார்.
மிக விரைவாக வளர்ச்சி அடைந்து வரும் செயற்கை நுண்ணறிவு மக்களின் வாழ்க்கையைப் பேரளவில் மாற்றக்கூடியது என்றும் மேம்படுத்தக்கூடியது என்றும் அவர் கூறினார்.
ஆனால், செயற்கை நுண்ணறிவுப் பயணத்தில் உலகம் இன்னமும் தொடக்கநிலையில் இருப்பதை அவர் சுட்டினார்.
இதனால் செயற்கை நுண்ணறிவு தொடர்பாகப் பேரளவிலான ஆர்வம் இருப்பதாகவும் முதலீடுகள் செய்யப்படுவதாகவும் பிரதமர் வோங் தெரிவித்தார்.
இந்நிலையில், அரசாங்கங்கள் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக மிகத் தெளிவான பார்வையுடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
“இதுவே சிங்கப்பூர் கையாண்டு வரும் அணுகுமுறை. அரசாங்கத் துறையின் சேவைத் தரத்தை வலுப்படுத்தவும் உயர்தரப் பணிகளில் கவனம் செலுத்த அதிகாரிகளுக்குக் கூடுதல் நேரம் வழங்கவும் பணிச் செயல்முறைகளை நெறிப்படுத்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் படிப்படியாகப் பயன்படுத்தி வருகிறோம்,” என்று பிரதமர் வோங் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வர்த்தகங்களுக்கும் தேவையான ஆதரவை சிங்கப்பூர் வழங்குகிறது என்றார் அவர்.
நீடித்த நிலைத்தன்மைமிக்க மேம்பாட்டுக்கும் சமமின்மையைக் குறைக்கவும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படலாம் என்று பிரதமர் வோங் கூறினார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைத் தழுவ ஊழியர்களுக்கு உதவி வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.
சிங்கப்பூரில் ஊழியர்களுக்குத் தேவையான திறன்களைக் கற்றுத்தர முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் அரசாங்கம் இணைந்து செயல்படுவதைப் பிரதமர் வோங் சுட்டினார்.

