தஞ்சோங் பகாரில் செயல்பட்டுவரும் ‘அக்பர் 24 ஹவர்ஸ்’ உணவகத்திற்கு கிட்டத்தட்ட ஒரு மாத தற்காலிகத் தடையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தூய்மை தொடர்பான 2 விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாததால் அங்கு பூச்சிகள் இருந்ததாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
எண் 2 லிம் டெக் கிம் ரோட்டில் உள்ள அந்த உணவகம் நவம்பர் 12ஆம் தேதி முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை மூடப்படும். மேலும் அதற்கு 800 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள் மீறியதால் மொத்தம் 12 தண்டனைப் புள்ளிகளை அந்த உணவகம் பெற்றுள்ளது.
மேலும் அந்த உணவக ஊழியர்கள் உணவு பாதுகாப்பு உரிமங்களை மீண்டும் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
கூகல் பக்கத்தில் அந்த உணவகத்திற்கு 580க்கும் அதிகமானவர்கள் மதிப்பாய்வு கொடுத்துள்ளனர். ஐந்து புள்ளிக்கு 3.8 புள்ளிகளை அது பெற்றிருந்தது.
12க்கும் அதிகமான தண்டனைப் புள்ளிகளைப் பெறும் உணவகங்கள், இரண்டு அல்லது நான்கு வாரங்களுக்குத் தடை செய்யப்படலாம் அல்லது அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படலாம் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு நினைவூட்டியது.

