கட்டுமானத் தளங்களில் பற்றவைப்புப் (வெல்டிங்) பணிகளைப் பாதுகாப்பு வலைகளிலிருந்து குறைந்தது மூன்று மீட்டர் தூரத்தில் மேற்கொள்ளப்படவேண்டும் என்று சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் மனிதவள அமைச்சும் தெரிவித்துள்ளன.
தீப்பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இல்லாவிடில், கட்டுமானத் தளங்களில் உள்ள பாதுகாப்பு வலைகள் பற்றவைப்புப் பணிகளையும் இதர வெப்பமான வேலைகளையும் தாங்கக்கூடிய பொருளால் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டில் வாசகர் பக்கத்தில் ஹாங்காங்கில் ஏற்பட்ட அண்மைய தீ விபத்து தொடர்பான டிசம்பர் 1ஆம் தேதி வெளிவந்த கடிதத்திற்கு சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் மனிதவள அமைச்சும் பதில் அளித்தன.
ஹாங்காங் தீ விபத்தில் ஏழு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடங்களில் பரவிய தீயில் குறைந்தது 160 பேர் உயிரிழந்தனர்.
உள்ளூர் கட்டுமானத் தளங்களில் துணிவலைகள், தார்ப்பாய், கேன்வாஸ் தாள்களை விரிவான முறையில் பயன்படுத்துவதால் தீப்பற்றும் ஆபத்துள்ளது என்று திரு சாலமன் டான் கியா டாங் தமது வாசகர் கடிதத்தில் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், ஹாங்காங் தீ விபத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்வதாகவும் அந்த அமைப்புகள் குறிப்பிட்டன.
சிங்கப்பூரின் தீப்பாதுகாப்புக் கட்டமைப்பை இன்னும் மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவதற்கான குடிமைத் தற்காப்புப் படையும் அமைச்சும் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
எந்தவொரு கட்டுமான மேம்பாட்டுப் பணிகளும் அதிகாரிகளின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட வேண்டும், கட்டுமானத் தளத்தில், பற்றவைப்பு உள்ளிட்ட வெப்பத்தை வெளியேற்றும் வேலைகள் மறைப்புகள் இல்லாத பகுதியில் செய்யப்பட் வேண்டும்.
தடுப்பு/பாதுகாப்பு வலைகள் காற்றோட்டத்தையோ வெளியேறும் பாதைகளையோ தடுக்கக்கூடாது.
முகப்புப் பொருள்கள், கட்டுமான நடைமுறைகள், தளத்தில் தீ அபாயக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் கடுமையான விதிகள் ஏற்கனவே இருப்பதாக அவை குறிப்பிட்டன.

