சிங்கப்பூர் - மலேசியா இடையே பேருந்துச் சேவை வழங்கிவந்த தனியார் நிறுவனமான ‘ஏரோலைன்’, வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) முதல் தனது பயணங்களை மீண்டும் தொடங்குகிறது.
அதற்கான உத்தரவு அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக மலேசியாவின் நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளர் வியாழக்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
பயணிகளை மலேசியாவின் மத்திய பேருந்துச் சந்திப்பு நிலையத்தில் இறக்கிவிடுவதற்குப் பதிலாக அவர்களை அந்நிறுவனம் தேர்வுசெய்த வேறு இடத்தில் இறக்கிவிட்டதால் மலேசிய அரசாங்கம் அதன்மீது நடவடிக்கை எடுத்தது.
நவம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை ‘ஏரோலைன்’ அனைத்துப் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தடைக் காலத்திற்கு முன்னதாகவே தனது பயணங்களைத் தொடங்கயிருப்பதாக அந்நிறுவனம் நவம்பர் 25ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
மேலும், பயணிகளின் ஆதரவுக்கு நன்றி என்றும் அதில் அந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
அந்நிறுவனத்தின் இணையப் பக்கத்தில், பயணிகள் ஏறும், இறங்கும் இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை.

