சிங்கே ஊர்வலத்தில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு

சிங்கே ஊர்வலத்தில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Nov 2026 - 7:15 pm

2 mins read

சிங்கே ஊர்வலத்திற்கான அலங்கார ஊர்திகள், உடைகள், இசை ஆகியவற்றை வடிவமைக்கச் சிங்கப்பூர்க் கலைஞர்களும் குடியிருப்பாளர்களும் முதன்முறையாகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியுள்ளனர்.

படைப்பாளர்கள், வல்லுநர்களின் வழிகாட்டுதலின்கீழ், சிங்கப்பூரின் ஐந்து வட்டாரங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 5,000 பேர் தங்கள் எண்ணங்களை வரைந்து, இசைக் கூறுகளை உருவாக்கி இப்பணியில் பங்கேற்றனர்.

சிலர் உடைகளைத் தயாரிப்பதற்கு நிழற்பட, காட்சி மாதிரிகளை உருவாக்கச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளையும் சிலர் செயற்கை நுண்ணறிவு இசைக் கருவிகளையும் பயன்படுத்தினர்.

மக்கள் கழகம் ஏற்பாடு செய்யும் சிங்கே 2027, எஃப்1 வளாகத்தில் பிப்ரவரி 19, 20ஆம் தேதிகளில் நடைபெறும்.

சிங்கே எப்போதும் சமூகத்தின் படைப்பாற்றலால் வடிவமைக்கப்பட்டு வருவதாக மக்கள் கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் ஜிம்மி தோ நவம்பர் 26ஆம் தேதி தெரிவித்தார்.

சிங்கே 2027 உதவி இசை இயக்குநர் பாங் ஜியாசெங், 35, அக்டோபர் 17ஆம் தேதி ஏறத்தாழ 30 குடியிருப்பாளர்களுடன் ‘சுனோ’ கருவியைக் கொண்டு நான்கு மணி நேர இசைப் பயிலரங்கை நடத்தினார்.

தெம்பனிஸ் வடக்குச் சமூகக் கலை, பண்பாட்டு மன்றத் தலைவர் டாஃப்னி குய், தமது குழுவினர் செயற்கை நுண்ணறிவு மென்பொருளில் பல முறை முயன்று சிறந்த இசையைத் தெரிவுசெய்ததாகக் கூறினார். இசைப் பயிற்சி இல்லாதவர்களும் சொற்கள், ஒலிகள் மூலம் வழங்கிய கருத்துகளை இசைக்குழுவினர் மெருகேற்றிப் பாடல்களாக உருவாக்கினர்.

‘பாயும் இசைக்கோவை’ (‘Symphony of Flow’) எனும் கருப்பொருளிலும், 55வது பதிப்பாகவும் அமையும் இவ்விழாவில் ஐந்து அங்கங்களில் மரபுசார், சமகாலப் படைப்புகளுடன் 3,000 கலைஞர்கள் பங்கேற்பர்.

ஆசியானின் 60வது ஆண்டு நிறைவையொட்டிச் சிறப்பு ஆசியான் படைப்பும் இடம்பெறும்.

டிசம்பர் 19 முதல் ஜனவரி 10 வரை வட்டாரங்களில் ஊர்திப் பயிலரங்குகள் நடைபெறும். சிங்கே 2027 நுழைவுச்சீட்டுகள் டிசம்பர் 2ஆம் தேதி பிற்பகல் ஒரு மணி முதல் சிஸ்டிக் தளத்தில் விற்கப்படும். சிங்கப்பூரர்கள் அவற்றை வாங்க எஸ்ஜி கலாசாரச் சிறப்புத் தொகையைப் பயன்படுத்தலாம்.

குறிப்புச் சொற்கள்