சிங்கப்பூரின் அனைத்துப் பகுதிகளிலும் காற்றுத்தரம் புதன்கிழமை (அக்டோபர் 14) மாலை 6 மணியளவில் ஆரோக்கியமற்ற நிலைக்குச் சென்றது.
மணிக்கு ஒருமுறை கணக்கிடப்படும் பிஎம்2.5 காற்றுத்தர அளவீடு மேற்கு வட்டாரத்தில் 257ஐ எட்டியது.
தெற்கு வட்டாரத்தில் 148ஆகவும் மத்திய வட்டாரத்தில் 226ஆகவும் கிழக்கு வட்டாரத்தில் 190ஆகவும் அது பதிவானது. வடக்கு வட்டாரத்தில் 111ஆக அது அதிகரித்தது.
24 மணி நேரக் காற்றுத்தரக் குறியீடு அனைத்துப் பகுதிகளிலும் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது.
2.5 மைக்ரோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான விட்டம் கொண்ட நுண்ணிய காற்று மாசுத் துகள்களைக் குறிக்கும் பிஎம்2.5 அளவீடு 251க்கும் அதிகமாக இருக்கும்போது பொதுமக்கள் வெளியில் நடமாடுவதைக் குறைக்க வேண்டும் எனத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
முதியோர், கர்ப்பிணிகள், சிறார் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
காற்றுத்தரம் மோசமடைந்திருப்பதால் மேற்கு வட்டாரத்தில் உள்ள ஆக்டிவ்எஸ்ஜி விளையாட்டு நிலையங்களின் வெளிப்புற வசதிகளை ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர் அமைப்பு தற்காலிகமாக மூடியது.
சாஃப்ரா தோ பாயோ நிலையமும் வெளிப்புற நடவடிக்கைகளை நிறுத்தியது.
இந்தோனீசியாவின் கலிமந்தான், சுமத்ரா பகுதிகளில் காட்டுத்தீ பரவிவரும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இருப்பினும், காற்றின் திசை காரணமாக அடர்ந்த எல்லை தாண்டிய புகைமூட்டம் ஏற்படும் அபாயம் நீடிக்கிறது.
காற்றுத் தரம் மேலும் மோசமடைந்தால் பொதுமக்களைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை அரசு ஏற்கெனவே வெளியிட்டிருந்தது.
24 மணி நேரத்திற்கு ஒருமுறை எடுக்கப்படும் பிஎம்2.5 அளவீடு 200ஐத் தாண்டினால், தகுதிபெறும் நபர்களுக்கு என்95 முகக்கவசங்கள் விநியோகிக்கப்படும்.
காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 300ஐத் தாண்டி அபாயகரமான நிலையை எட்டினால், பள்ளிகளை மூடுவது குறித்துக் கல்வி அமைச்சு பரிசீலிக்கும்.
