புகைமூட்ட நிலை சீரடைவதற்கு முன்பாக காற்றின் தரம் 300ஐத் தாண்டக்கூடும்: கிரேஸ் ஃபூ

புகைமூட்ட நிலை சீரடைவதற்கு முன்பாக காற்றின் தரம் 300ஐத் தாண்டக்கூடும்: கிரேஸ் ஃபூ

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

16 Oct 2026 - 8:58 pm

2 mins read

சிங்கப்பூரில் நிலவும் புகைமூட்டம், வானிலை நிலவரங்கள் காரணமாக, வரும் நாள்களில் காற்றுத் தரம் அபாயகரமான அளவை எட்டக்கூடும் என்றும் அப்போது பிஎஸ்ஐ குறியீடு 300ஐத் தாண்டக்கூடும் என்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 16) தெரிவித்தார்.

இருப்பினும், இன்னும் மூன்று முதல் நான்கு வாரங்களில் தொடங்கவிருக்கும் பருவமழை இடைக்காலம், காற்றின் தரத்தை மேம்படுத்தக்கூடும் என்று அவர் கூறினார். கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, மனிதவளத் தற்காலிக அமைச்சர் ஜாஸ்மின் லாவ் ஆகியோருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“டிசம்பர் மாதத் தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழைக் காற்று வீசத் தொடங்கும்போது, ​​சுமத்ரா, கலிமந்தான் பகுதிகளிலிருந்து வரும் புகைமூட்டம் சிங்கப்பூருக்கு வராத திசையை நோக்கிச் சென்றுவிடும்,” என்று திருவாட்டி ஃபூ கூறினார்.

தேவை அதிகரித்ததன் காரணமாகச் சில சில்லறை விற்பனைக் கடைகளில் முகக்கவசங்கள் தற்காலிகமாகக் கிடைக்காமல் போகலாம் என்றாலும் சில்லறை விற்பனையாளர்களின் கிடங்குகளிலும் அரசாங்கத்தின் கையிருப்பிலும் போதுமான அளவு என்95 முகக்கவசங்கள் உள்ளன என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார்.

“புகைமூட்டச் சூழல் தொடர்ந்து மோசமடைந்தால், நாங்கள் மீண்டும் ஒருமுறை முகக்கவசங்களை விநியோகிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வோம்,” என்று அவர் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டிற்குப் பிறகு, சிங்கப்பூரில் காற்றுத் தரம் மோசமாக இருந்த மிக நீண்ட காலகட்டம் இதுவாகும்.
2015ஆம் ஆண்டிற்குப் பிறகு, சிங்கப்பூரில் காற்றுத் தரம் மோசமாக இருந்த மிக நீண்ட காலகட்டம் இதுவாகும். - படம்: ஏஎஃப்பி

தீவு முழுவதும் முகக்கவசங்களை வழங்கும் இயந்திரங்கள் படிப்படியாக நிறுவப்பட்டு வருகின்றன. அக்டோபர் 16ஆம் தேதிக்குள், பொதுப் போக்குவரத்து மையங்கள், சமூக சேவை அலுவலகங்கள் என மொத்தம் 37 இடங்களில் இவை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

சிங்கப்பூரில் கடைசியாக 2015ஆம் ஆண்டில் பிஎஸ்ஐ அளவீடு 300க்கு மேல் பதிவானது. அப்போது அந்த அளவு அதிகபட்சமாக 341ஐ எட்டியிருந்தது.

இது 24 மணிநேர கால அளவைக் கொண்டு கணக்கிடப்படுவதால், நீண்ட நேரம் காற்று மாசுபாட்டிற்கு ஆளாவதை மதிப்பிடுவதற்கு இந்த அளவீடு பயனுள்ளதாக இருக்கும் என்று அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.

மக்கள் பிஎஸ்ஐ குறியீட்டுடன், காற்றுத் தரத்தை அளவிடும் மற்றோர் அளவீடான, ஒவ்வொரு மணிநேரத்திற்குமான பிஎம்2.5 அளவீடுகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

24 மணிநேர பிஎஸ்ஐ அளவு அதிகமாகவும், அதே சமயம் பிஎம்2.5 அளவு குறைவாகவும் இருப்பது, தற்போதைய சூழல் மேம்பட்டுள்ளதைக் காட்டுகிறது என்று திருவாட்டி ஃபூ தெரிவித்தார்; இருப்பினும், நீண்ட நேரம் இத்தகைய சூழலில் இருப்பது தொடர்ந்து கவலைக்குரிய ஒன்றாகவே உள்ளது.

எனவே, அடுத்த நாளுக்கான செயல்பாடுகளைத் திட்டமிடுவதற்கு முன், 24 மணிநேர பிஎஸ்ஐ முன்னுரைப்பைப் பார்க்குமாறு பொதுமக்களுக்கு திருவாட்டி ஃபூ அறிவுறுத்தினார். மேலும், தேசிய சுற்றுப்புற அமைப்பு தனது இணையத்தளத்தில் இந்தத் தகவலை இன்னும் தெளிவாகக் குறிப்பிடுமாறு தாம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
பிஎஸ்ஐபுகைமூட்டம்கிரேஸ் ஃபூசில்லறை விற்பனை