சிங்கப்பூரில் சற்று மேம்பட்டது காற்றின் தரம்

சிங்கப்பூரில் சற்று மேம்பட்டது காற்றின் தரம்

மேற்கு, மத்திய வட்டாரங்களில் காற்றுத்தரம் இன்னும் ஆரோக்கியமற்ற நிலையில்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Oct 2026 - 12:16 pm

2 mins read

சிங்கப்பூரில் காற்றின் தரம் திங்கட்கிழமை (அக்டோபர் 19) காலை வேளையில் பொதுவாக மேம்பட்டுள்ளது. பெரும்பாலான வட்டாரங்களில் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (பிஎஸ்ஐ) குறைந்துள்ளது. ஆயினும், ஐந்து வட்டாரங்களில் இரண்டில் குறியீடு, தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையிலேயே உள்ளது.

முற்பகல் 11.15 மணி நிலவரப்படி, 24 மணி நேரக் குறியீடு, வடக்கில் 86ஆகவும் தெற்கில் 93ஆகவும் கிழக்கில் 98ஆகவும் பதிவாகியிருந்தது. இவை அனைத்தும் மிதமான வரம்பிற்குள் அடங்கும். அதே வேளையில், மேற்கில் (126), மத்திய வட்டாரத்தில் (105) பதிவான குறியீடு தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையிலேயே நீடித்தது.

ஞாயிற்றுக்கிழமையுடன் ஒப்பிடும்போது நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளது. அன்று காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது.

குறியீடு, 51க்கும் 100க்கும் இடைப்பட்டிருக்கும்போது காற்றின் தரம் மிதமானதாகக் கருதப்படும். அது 101லிருந்து 200க்குள் இருக்கும்போது ஆரோக்கியமற்றதாகவும் 200ஐத் தாண்டினால் மிகவும் ஆரோக்கியமற்றதாகவும் வகைப்படுத்தப்படும்.

இதற்கிடையே, தற்போதைய காற்றின் தரத்தைக் குறிக்கும் ஒரு மணி நேர பிஎம்2.5 குறியீடு, திங்கட்கிழமை, சாதாரண அளவுக்கும் உயர்ந்த அளவுக்கும் இடையில் உள்ளது. பிஎம்2.5 குறியீடு, காற்றில் கலந்துள்ள நுண்ணிய தூசுத் துகள்களை அளவிடுகிறது.

முற்பகல் 11.15 மணிக்கு, வடக்கில் (42), தெற்கில் (29), கிழக்கில் (28), மத்தியப் பகுதியில் (24) பிஎம்2.5 குறியீடு சாதாரண வரம்பில் இருந்தது. அதேநேரம், மேற்கு வட்டாரத்தில் இது 63 என உயர்ந்த நிலையில் நீடித்தது.

பிஎம்2.5 குறியீடு, 0 முதல் 55 வரை இருந்தால் அது சாதாரண அளவையும், 56 முதல் 150 வரை பதிவானால் நுண்ணிய துகள்களின் அடர்த்தி அதிகரித்துள்ளதையும் குறிக்கிறது. குறியீடு, 151 முதல் 250 வரை இருந்தால் அதிகமாகவும் 251க்கும் மேல் பதிவானால் மிக அதிகமாகவும் வகைப்படுத்தப்படுகிறது.

இந்த புகைமூட்டக் காலத்தின் மிக அதிக பிஎம்2.5 குறியீடு, அக்டோபர் 14ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தீவின் மேற்குப் பகுதியில் 288ஆகப் பதிவானது.

திங்கட்கிழமை சிங்கப்பூரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காற்றானது தெற்கு-தென்கிழக்கு அல்லது தெற்கிலிருந்து வீசக்கூடும் என்பதால் கலிமந்தானிலிருந்து சிங்கப்பூருக்குப் புகைமூட்டம் பரவுவது குறைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இருப்பினும், சுமத்ராவிலிருந்து வரும் புகைமூட்டம் சிங்கப்பூரை நோக்கி நகரக்கூடும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு கூறுகிறது.

சிங்கப்பூர் தற்போது 15வது நாளாக ஆரோக்கியமற்ற காற்றைச் சந்தித்து வருகிறது. இதுவே, 2015ஆம் ஆண்டு புகைமூட்ட நெருக்கடிக்குப் பிறகு மோசமான காற்றுத்தரம் பதிவான மிக நீண்ட காலகட்டம். 2015ல் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 7 வரை 14 நாள்களுக்கு மோசமான காற்றுத்தரம் நீடித்தது.

குறிப்புச் சொற்கள்