புதுடெல்லி: அமேசான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 35 பில்லியன் யுஎஸ் டாலரை (S$45.4) இந்தியாவில் முதலீடு செய்ய டிசம்பர் 10ஆம் தேதி உறுதியளித்தது.
இது, விரைவான வர்த்தகம் முதல் செயற்கை நுண்ணறிவு, மேகக் கணிமை வரை வணிகங்களை விரிவுபடுத்துவதற்கான முயற்சியாக இருக்கும்.
அமெரிக்காவின் ஆகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான அமேசான், உலகின் ஆக அதிவேகமாக வளர்ச்சி காணும் இந்திய மின்னிலக்கச் சந்தையில் முதலீடுகளை கொட்டுகிறது.
இதற்கு, ஒருநாள் முன்னதாக மற்றொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், அதன் ஆகப்பெரிய ஆசிய முதலீடாக இந்தியாவில் 17.5 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்வதாக அறிவித்தது. இந்தியாவில் ‘ஏஐ’ கட்டமைப்பு கட்டியெழுப்ப மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் அமேசானின் முதலீடு அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, தளவாட உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் முதலீடுகள் செய்யப்படும். இதனால் இந்தியாவில் கூடுதலாக 2030 வரையில் ஒரு மில்லியன் வேலைகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா, அமெரிக்காவின் அமேசான் மற்றும் ஆல்ஃபாபெட்டின் கூகல் போன்ற பெரிய இணைய நிறுவனங்களுக்கு அதிக வளர்ச்சி அளிக்கும் சந்தையாக உள்ளது.
“மில்லியன்கணக்கான இந்தியர்களுக்கு ‘ஏஐ’யைப் பரவலாக்கி இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று அமேசானுக்கான வளர்ந்து வரும் சந்தைகள் பிரிவின் தலைவர் அமித் அகர்வால் தெரிவித்தார்.

