சிங்கப்பூரில் அமெரிக்கப் பாடகியும் நடிகையுமான அரியானா கிராண்டேவை நோக்கி ஓடி, நிகழ்ச்சியில் தொந்தரவு ஏற்படுத்திய ஆஸ்திரேலிய ஆடவர் அவரது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார்.
இதனை குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) கூறியது.
ஜான்சன் வென், 26, எனப்படும் அந்த ஆடவர் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரியானா நடித்த ‘விக்கட்: ஃபார் குட்’ என்னும் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி நவம்பர் 13ஆம் தேதி யூனிவர்சல் ஸ்டூடியோவில் நடைபெற்றது.
அந்தப் படத்தில் நடித்திருப்பவர்கள் மஞ்சள் விரிப்பில் நடந்து அரங்கினுள் நுழைந்தபோது திடீரென்று தடுப்புக் கம்பிகளைத் தாண்டி வென் குதித்தார்.
வேகமாக ஓடி நடிகை அரியானாவைத் தமது கைகளால் வளைத்தவாறு மேலும் கீழும் குதித்தார் அவர். இரவு 7 மணிக்கும் 7.10 மணிக்கும் இடையே சம்பவம் நிகழ்ந்தது.
உடனே கிராண்டேயின் சக நடிகர் சிந்தியா எரிவோ இடைமறித்து அந்த இளையரைத் தடுத்தார். பாதுகாவல் அதிகாரிகள் அவரை வெளியேற்றினர்.
வென் மீண்டும் அந்தத் தடுப்பைக் கடக்க முயன்றபோது அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். மறுநாள் நள்ளிரவு வாக்கில் வென் கைது செய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பொது அமைதிக்குத் தொந்தரவு கொடுத்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அந்தக் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி அந்த ஆடவருக்கு ஒன்பது நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
திரைப்பட சிறப்புக் காட்சியைக் காணவும் விடுமுறையைக் கழிக்கவும் 90 நாள் சமூக வருகை அனுமதியில் நவம்பர் 11ஆம் தேதி வென் சிங்கப்பூர் வந்தது விசாரணையில் தெரியவந்தது.

