நாடுகடத்தப்படவுள்ள ஏமஸ் யீ; உதவி கோரும் நண்பர்

2 mins read
5c20846a-9392-47d6-bb69-5257001677e3
சிங்கப்பூரர் ஏமஸ் யீ - படம்: இலினோய் சட்ட, ஒழுங்குப் பிரிவு.

அமெரிக்காவில் சிறாரிடம் பாலியல் குற்றங்களைப் புரிந்த சிங்கப்பூரர் ஏமஸ் யீ, விரைவில் சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், யீயின் நண்பர் ஒருவர், உலக நாடுகளின் தூதரகங்களிடம் உதவி கேட்டு வருகிறார். யீக்கு குடியுரிமை அல்லது நாட்டில் தங்க அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்த பதிவை யீயின் வலைத்தளத்தில் நவம்பர் 26ஆம் தேதி பதிவிட்டார் அவர்.

“உங்களுடைய நாடு யீக்கு குடியுரிமை அல்லது நிரந்தர வாசத் தகுதி கொடுக்க விரும்பினால் உடனடியாகத் தொடர்புகொள்ளவும். ஏமசுக்கு விருப்பமில்லாத நாட்டுக்கு அவர் நாடு கடத்தப்படக்கூடும்,” என்று அவர் பதிவிட்டார்.

அதேபோல் இந்தத் தகவலைக் கொண்ட கடிதங்கள் உலக நாடுகளின் தூதரகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது ஏமஸ் அமெரிக்கக் குடிநுழைவு, சுங்கத்துறை அமலாக்கப் பிரிவின் தடுப்புக்காவலில் உள்ளார்.

2016ஆம் ஆண்டு மருத்துவக் காரணங்களைச் சொல்லி ஏமஸ் சிங்கப்பூரைவிட்டு வெளியேறினார். ராணுவச் சேவையையும் செய்யவில்லை. பின்னர் அரசியல் காரணங்களைக் கூறி அமெரிக்காவில் அவர் தஞ்சமடைந்தார்.

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறாரிடம் பாலியல் குற்றங்கள் புரிந்ததற்காக ஏமஸ் அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிங்கப்பூர் திரும்பினால் ஏமஸ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவார்.

தேசியச் சேவையில் சேர்க்கப்படுவதற்கான சட்டத்தின்கீழ் (Enlistment Act) அவர்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசியச் சேவையில் சேர்வதற்கு முன்பு மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைக்கு வராமல் தகுந்த உரிமமின்றி வெளிநாட்டில் இருந்தது அதற்குக் காரணம்.

குறிப்புச் சொற்கள்