நிதிமீட்புத் திட்டத்தை வகுத்துவரும் விலங்குநல ஆர்வலர்கள் அமைப்பு

2 mins read
d0ae0256-ba64-42f3-b18d-eec74c937ed5
விலங்குநல ஆர்வலர்கள் அமைப்பின் நிறுவனர்களான திரு மோகன் திவ் ஸ்ரீதரன், 60, திருவாட்டி கேத்தரின் ஸ்ட்ராங், 70. - படம்: சாவ்பாவ்

பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வாடகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டத்தை வகுத்துவருவதாகவும், அதே சமயம் தனது செயல்பாடுகளைக் குறைந்த அளவில் தொடரத் திட்டமிட்டுள்ளதாகவும் விலங்குநல ஆர்வலர்கள் அமைப்பு (Animal Lovers League) தெரிவித்துள்ளது.

தேசியப் பூங்காக் கழகம் உட்பட பிற மீட்புக் குழுக்களும் அமைப்புகளும், அமைப்பின் பொறுப்பிலுள்ள, நோயுற்ற, வயதான பல நாய்களையும் பூனைகளையும் பராமரிக்க முன்வந்துள்ளன.

அமைப்பின் நிறுவனர்களான 60 வயதான திரு மோகன் திவ் ஸ்ரீதரனும் 70 வயதான திருவாட்டி கேத்தரின் ஸ்ட்ராங்கும், $500,000 மதிப்பிலான வாடகை நிலுவைக்கும் தாங்கள் பராமரிக்கும் விலங்குகளின் மருத்துவச் செலவுகளுக்கும் நிதி திரட்ட முடியவில்லை என்றும் அதன் விளைவாக தங்கள் அமைப்பு அதன் வளாகத்தைக் கைவிட வேண்டியதாயிற்று என்றும் புதன்கிழமை (டிசம்பர் 10) தெரிவித்தனர்.

குத்தகை காலாவதியாகிவிட்டது என்ற செய்தி வெளியானதிலிருந்து முதன்முறையாக ஊடகங்களிடம் அவர்கள் பேசினர்.

அனைத்து முயற்சிகளுக்குப் பிறகும், பொதுமக்களின் நன்கொடைகள் இல்லாதது, கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு வயதான, நோயுற்ற செல்லப்பிராணிகளைத் தங்கள் அமைப்பில் விட்டுச்சென்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஏற்கனவே பெரிதாகிக்கொண்டிருந்த இந்தச் சிக்கலிலிருந்து தங்களால் மீண்டு வர முடியவில்லை என்று அவர்கள் விளக்கினர்.

“அதிகப்படியான பணம் தேவைப்படும் இடங்களுக்கு நிதி செல்வதில்லை. எங்களுக்கு போதுமான ஆதரவு கிடைப்பதில்லை,” என்று திரு மோகன் கூறினார்.

“நாங்கள் பெறும் நிதியில் பெரும்பகுதி நேரடியாக விலங்குகளின் மருத்துவச் செலவுகளுக்குச் செல்கிறது. மருத்துவச் செலவுகளும் மிக அதிகமாக உள்ளன. எங்கள் அமைப்பில் உள்ள பல நாய்கள், பூனைகள் வயதானவை மற்றும் நோயுற்றவை. நாங்கள் கருணைக்கொலை நடைமுறையைப் பயன்படுத்துவதில்லை என்பதால், அவற்றுக்கு வலிகுறைப்பு சிகிச்சை அளித்துக் கவனித்துக்கொள்வோம்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், மற்ற விலங்குநலக் குழுக்கள் முன்வந்து நிதியளித்து, தங்கள் அமைப்பின் பராமரிப்பிலுள்ள சில விலங்குகளின் பொறுப்பை ஏற்று, அதன் தங்குமிடவாசிகளுக்கு உணவையும் வழங்கி உதவியதற்கு அவர்கள் நன்றிதெரிவித்தனர்.

தங்கள் நிதிமீட்புத் திட்டத்தை உருவாக்கிவரும் இவ்வேளையில், விலங்குகள் எந்தச் சிரமத்திற்கும் உள்ளாகாமல் இருப்பதுதான் மிக முக்கியம் என்றார் திரு மோகன்.

குறிப்புச் சொற்கள்