கடனைத் திருப்பிக்கொடுக்காத குடியிருப்பாளரைத் துன்புறுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவர் மீது மேலுமொரு குற்றச்சாட்டு வியாழக்கிழமை (டிசம்பர் 4) சுமத்தப்பட்டுள்ளது.
உரிமமின்றிப் பணம் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவருக்காக ஜெரால்டின் குவெக் யி லிங் எனும் அந்த 42 வயது ஆசிரியர் வேலை செய்ததாகக் கூறப்பட்டது.
முறையான உரிமம் பெறாமல் மற்றவர்களுக்குப் பணம் கொடுத்தவரின் பெயர், டிராவிஸ் ஹெங் என்று சொல்லப்பட்டது.
குவெக் விடுவிக்கப்பட S$15,000 பிணைத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டு குற்றச்சாட்டுகளிலும் அவர், 40 வயது முகம்மது ஹைருல் நிஸாம் முகம்மது ஜோஹார் எனும் மலேசிய ஆடவரை கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி குற்றச் செயலில் ஈடுபடுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
முதல் தடவை, பன்றியின் கால் அடங்கிய பையை ஹைருலிடம் குவெக் கொடுத்ததாகத் தெரிகிறது.
பின்னர் ஹைருல், செங்காங்கில் ஃபெர்ன்வேல் ரோட்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீட்டின் கதவில் அந்தப் பையைத் தொங்கவிட்டதாகக் கூறப்பட்டது.
இம்முறை குவெக், அதே போன்றதொரு பையை ஹைருலிடம் கொடுத்து, டோசன் ரோட்டில் உள்ள கழக அடுக்குமாடி வீட்டின் கதவில் தொங்கவிடச் சொன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இரண்டு சம்பவங்களிலும் பையுடன் ஒரு குறிப்பும் இருந்தது. அதில், “வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். நான் வந்து வீட்டை எரிப்பதற்கு முன் என்னை அழைக்கவும். இதுவே இறுதி எச்சரிக்கை,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நவம்பர் மாதம் இணையத்தில் தேடியபோது, குவெக் பற்றிய தகவல்கள் கிடைத்தன.
அவர் செயின்ட் பேட்ரிக் பள்ளியில் ஆங்கில மொழி, இலக்கியத் துறையின் தலைவராக இருந்தது தெரியவந்தது. வியாழக்கிழமை நிலவரப்படி, பள்ளியின் இணையப் பக்கத்தில் துறைத் தலைவர்களின் பட்டியலிலிருந்து அவரின் பெயர் அகற்றப்பட்டிருந்தது.
குவெக்கின் வழக்கு, அடுத்த ஆண்டு (2026) ஜனவரி 6ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில், ஹைருலின் வழக்கு, இம்மாதம் 9ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

