போதைப் பொருள்களுக்கு எதிராக சிங்கப்பூர் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் 76 பேர் கைதாகினர். இவர்களில் மூன்று சிறு வயதுப் பிள்ளைகளுக்கு தாயான ஒருவரும் அடங்குவார் என்று போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த மாதின் வயது 31. அவரின் இரண்டு பிள்ளைகளின் வயது 14 மற்றும் 12 என்று கூறப்படுகிறது. அந்த மாதை போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அவரது வீட்டில் கைது செய்தனர்.
மெத்தமஃபிட்டமின் என்றும் ‘ஐஸ்’ என்றும் அழைக்கப்படும் போதைப் பொருளும் அதற்குரிய உபகரணங்களும் அந்த சிறுவர்கள் அணுகக்கூடிய படுக்கை அறையில் கண்டெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது குறித்து போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு சனிக்கிழமை (மார்ச் 15ஆம் தேதி) தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது. அவரது பிள்ளைகள் தற்பொழுது உறவினர் ஒருவரின் பராமரிப்பில் விடப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற பல்வேறு சம்பவங்களில் கடந்த 2024ஆம் ஆண்டு போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் குறைந்தது 10 பிள்ளைகளை அவர்கள் வசிக்கும் இல்லங்களிலிருந்து காப்பாற்றியதாக தெரிகிறது.
இதுபோல் 2023ஆம் ஆண்டு நான்கு பிள்ளைகள் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

