தட்டம்மையைச் சமாளிக்கும் எதிர்ப்பு சக்தி: பணிப்பெண்களிடம் பரிசோதனை

தட்டம்மையைச் சமாளிக்கும் எதிர்ப்பு சக்தி: பணிப்பெண்களிடம் பரிசோதனை

2 mins read
04dfa07e-0675-4213-b28d-a8e74ec25ce8
எம்எம்ஆர் தடுப்பூசி. - படம்: ராய்ட்டர்ஸ்

மனிதவள அமைச்சு, மாதிரிச் சோதனைகளின் மூலம், தங்கள் பணிப்பெண்கள் தட்டம்மைக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்பதை நிரூபிக்க முடியாத முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்திக்கான ஆவணச் சான்றுகளை மனிதவள அமைச்சு கோரலாம். அதற்கு இணங்காத முதலாளிகளின் தடுப்பூசிச் சான்று சமர்ப்பிக்கப்படும் வரை அவர்களின் பணிப் பெண்களின் ‘வொர்க் பெர்மிட்’ அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என்று மனிதவள அமைச்சும் தொற்று நோய்கள் தடுப்பு நிலையமும் (சிடிஏ) நேற்று (ஜூன் 19) ஊடகக் கேள்விகளுக்குப் பதிலளித்தன.

செப்டம்பர் 1 முதல், தட்டம்மைக்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போடப்படாத இளம் குழந்தைகள் உள்ள வீடுகளில் பணிபுரியும் பணிப்பெண்கள், இந்த நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு கடந்த வாரம் அறிவித்தது.

ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட முதலாளிகள், தங்கள் பணிப்பெண்களுக்கு ஏற்கெனவே தட்டம்மைக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா அல்லது தட்டம்மைக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதா என்று தெரிவிக்க வேண்டும்.

அப்படி தடுப்பூசி போடப்படாத பணிப்பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு செய்யப்பட்டுள்ளதா மற்றும் ஏழு வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதையும் அறிவிக்க வேண்டும்.

‘வொர்க் பெர்மிட்’ அனுமதி வழங்கும் நேரத்திலோ அல்லது ‘வொர்க் பெர்மிட்’ அனுமதியைப் புதுப்பிக்கும் நேரத்திலோ அவர்கள் அவ்வாறு தெரிவிக்க வேண்டும்.

ஒரு பணிப்பெண் தட்டம்மைக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் அல்லது வீட்டில் உள்ள ஏழு வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தட்டம்மைக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தால், பணிப்பெண்ணுக்குத் தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை.

தடுப்பூசி போட்டதற்கான ஆவண ஆதாரம் இல்லாத பணிப்பெண்கள், தட்டம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்தியைச் சரிபார்க்க ஒரு தனியார் மருந்தக மருத்துவரிடம் ரத்தப் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

அல்லது அவர்கள் மீண்டும் தட்டம்மை தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது பற்றி பரிசீலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்